பாய்சம் காய்ப்பு


பாய்சம் காய்ப்பு



             வீசி அடிக்கும் மாசி வெயில் கொளுத்தி தள்ளியது. தவளைச் சங்கூதியின் சங்குச் சத்தம் கீழ ஆத்தங்கரையிலிருந்து செட்டியார்குளம் வரை புத்தூர் முழுவதும் கேட்டது.

 

பம்பா…… ப ப பம்பா, பம்பா, பம்பா பப பம்பா…… பள்ளிக்கொடத்துக்கு வரிசையா போன பையனுவளும் புள்ளையளும் தவளைச் சங்கூதியை ஆச்சரியமா பாத்துகிட்டே போனார்கள்.

 

மாசி மாசம் திருச்செந்தூர் கோவில் கொடி ஏறியதும் மலையாளத்தை பாத்து வரும் தவளைச்சங்கூதி பத்தாம் திருவிழா வரை வீடு வீடா தவளைச் சங்கு ஊதிக்கிட்டே நெல்லும், காணிக்கையும் வசூல் செய்வார்.

 

தவளச்சங்கூதியின் சங்கு ஒரு பெரிய அன்னப்பறவை இறக்கை விரித்து தாம்பாளத்தில் அமர்ந்தது போல் இருக்கும். சங்கு பித்தளையால் பொதியப்பட்டிருக்கும். பார்க்க பழ பழ-ண்ணி தங்கப் பொதிவு மாதிரி இருக்கும். வாய்ப்பகுதி ஒடுங்கலாக பித்தளை பூண் கட்டப்பட்டிருக்கும். தவளைச் சங்கூதி முறட்டு ஆறடி உயரம். வெள்ளவேட்டி வெள்ளச்சட்டை, தங்கசருகை போட்ட நீள கவுணியை தலையில் கட்டியிருப்பது, கிரீடம் போல அவரின் தோற்றத்தை தூக்கி காட்டும். இடதுகையில் ஒரு தோசைமணி, நடுவிரலில் அதனை அடிக்கும் கட்டையை கயிறால் சுத்தியிருக்கும்.

 

பம்பா……பப……பம்பா என்று வலதுகையால் உரக்க தூக்கி சங்கூதும்போது இடது கை தொடர்ந்து மணியை அடிக்கும். வாய் முருக கீர்த்தனைகளைப் பாடும். பார்ப்பவர்கள் தன்னை அறியாமல் கையெடுத்து கும்பிடுவதோடு சற்று கூடுதலாகவே தானமும் செய்வது வழக்கம்.

 

பள்ளிக் கொடத்துக்கு போன சம்முவம், அருமத்தங்கத்திடம் எங்க வூட்டுக்கு தவளச்சங்கூதி வந்தாரு. சங்குசத்தம் பிரம்மாதமா இருந்து. எங்கம்ம ஒரு சொளவு நெல்லும், ரண்டு தேங்காயும், மரக்கறியும் கொடுத்தாவ. அவருக்க மொகத்துல ஒரு நிறவு இல்ல. உடன எங்க ஐயா எட்டணா கொடுத்ததும், திருநூற நெத்தியில பூசிட்டு பம்பா…… பம்பா…… பப பம்பா-ண்ணதும் ஊடே அதிரிந்திட்டு பாத்துக்க.

 

பள்ளிக் கொடத்துக்கு கூட்டத்தோட வந்த பாலுமணி, நான் ரோட்டோட வரல்ல, குறுக்க போவப் போறேண்ணதும், லே போவாத. குறுக்க வயக்காட்டுக்கோடி போனா, வரப்புல தொழி வழுக்கி கீழ உழுந்துருவா. புத்தூர் வாத்தியார் அறிஞ்சா ஒங் குண்டி தோலை உரிச்சிருவாரு…… வெளுத்துப் புடுவாரு-ண்ணதும் பாலுமணி ரூட்ட மாத்திட்டான்.

 

கருக்காவிளை கிட்ட வந்ததும் பாலுமணி அருமத்தங்கத்துக்கிட்ட, டே தவளச் சங்கூதி வந்தாச்சில்லியா, சமாதியில பாய்சம் காய்ப்பு எண்ணக்கி-ண்ணதும், அருமத்தங்கம்…… இண்ணைக்கு ஒண்ணாந் திருவிழாயில்லியா, ஏழாம் திருவிழா அண்ணைக்கு பாய்சம் காய்ப்பு எங்க வீட்ல பத்து நாளும் மீனு வாங்க மாட்டாவ பாத்துக்க.

 

உச்சி வெயில் மண்டையை பிளக்கும் மாசி மாதம், ஞாயிற்றுக்கிழமை. பள்ளிப் பிள்ளையளுக்கு லீவு. மட்டுப்பாவு வீட்டுக்காரருக்க வீட்டுப்பக்கமுள்ள வடிவேல் நாடார் சமாதியில் ஏழாம் திருவிழா (திருச்செந்தூர் கோவில் மாசி திருவிழா) அண்ணைக்கு பாய்சம் வைப்பு அது ஒரு திருவிழா தான். புதுவயல் காடு அறுப்படிப்பு சீசன். பகலில் அறுவடைக்காரர்கள் வயல் அறுத்துக் கதிர்கட்டுகளை உடமஸ்தர் வீட்டுக்கு சுமந்து செல்லும் பரபரப்பு அவர்கள் முதுகில் வியர்வை உப்பாகியிருக்கும். மதியம் திரும்பி கதிர்க்கட்டுகளில் இருந்து ஒவ்வொரு அப்பு வைக்கோல் தாளை எடுத்து தலைக்கு மேல் கொண்டு சென்று இரு தடவை தலையடி அடிக்கும்போது நெல் மணிகள் நல் மணிகளாக உதிரும். பிறகு சூடடிக்காக, அடித்த வைக்கோல் கதிர்களை அப்பு, அப்பாக வட்டமாக கூட்டி வைப்பார்கள். மாலையில் அழகுநாராயணன், பெருமாள்பாண்டி குழுவினர் பசுமாடு, காளை மாடு, கிடாக்கமாடுகளை பிணையலில் பிணைத்து சூடடிக்கும் போது  சண்டும் சாவியுமாக நெல்லு வெளியேறும்.

 

சூடடி முடிஞ்சதும், கூறோடி வைக்கோல் கொக்கியால் சூடை கொத்தி உருட்டி வருவது கடல்அலை எழும்பி தரையில் விழுவது போல் இருக்கும். அப்பு அப்பா எடுத்து உதறி நெல்லை பிரித்து விட்டு வைக்கோலை காயப் போட தலையில் சுமந்து அங்கங்கே வைப்பார்கள். சூடடி முடிந்த நெல்லை சண்டோடு ஒருவர் அள்ளி கீழிருந்து மேல் நோக்கி வீச சண்டு பறந்து போக, நெல் கீழே விழும். அதையும் கையில் சுளவுகளோடு (முறம்) நிற்கும் ஐந்தாறு பேர் சுற்றி சுற்றி வந்து வீசும் போது வீடும், வீதியும் புழுதி மயமாத் தான் கசபெரளும்.

 

மூணாந் திருவிழாவுக்கே ஊர் முழுக்க வீடு வீடா சமாதியில பாய்சம் வைக்க நெல்பிரிவு நடக்கும். பிரிந்த நெல்லை ரைஸ்மில்லில் குத்தி பச்சரியாக்கி நாலு வார்ப்பு (அண்டா) பாயாசம் ரெடியாகும். ஒரு பக்கம் ஐயப்பன், சுப்பையன், ஞானமுத்து வெட்டி வந்த பச்சை பனை ஓலையை கிழித்து பட்டை பிடித்து மலைபோல கூட்டியிருப்பார்கள்.

 

வார்ப்படுப்புல விறகு கட்டைகளெல்லாம் தீயை கக்கி கக்கி கரிக் கொட்டையானது. பெரிசுகளெல்லாம் சமாதியை சுத்தியிருந்து, கெருட பத்து, சஷ்டி கவசம், முருகர் பாடல்களை பாடுவது தொடரும். சமாதி பூசைக்கான வேலையில் வைத்தியர் மும்முரமாகயிருப்பார். கூட்டம் கூட்டமா சிறுவர்களின் விளையாட்டும் நடந்து கொண்டேயிருக்கும். பல ஊரிலிருந்தும் பல சாதியினரும் பாய்சம் குடிக்க வந்து கொண்டே இருந்தார்கள்.

 

ஞானக்கண்ணு பாட்டா ஒரு கூட்டத்திலே இருந்து சமாதியாயிருக்கும் வடிவேல் நாடாரின் பூர்வீகத்தை புரட்டி ஒப்புவித்தார். ஆமா பத்து தலைமுறைக்கு முந்தி திருச்செந்தூர் பக்கமுள்ள நாதன்கிணறு பூச்சிகாட்டிலிருந்து வந்தவர் எங்க கண்ணையா வடிவேல் நாடார். சாதி கொடுமையோ, மன்னராட்சி கொடுமையோ, வறட்சியினால் வந்த பஞ்சம் பட்டினியோ, முக்காவாசி பேர் கிழக்க நோக்கி போயிருக்காவ. கிழக்க நோக்கி போனவனுவ யாவாரி ஆயிட்டானுவ. கால்வாசிப் பேர் மேக்க நோக்கி வந்திருக்காவ. அதுல ஒரு குடும்பம் வடிவேல் நாடார் குடும்பம். நம்ம ஊருல வந்து தங்கியிருக்காவ. இங்கயும் பொன்னும், பொருளுமா வௌஞ்சி, சே சே முள்ளும், காடும், தெரடும் பள்ளமுமான பூமி, குடிக்க தண்ணி வேணுண்ணா நாற்பதடி தோண்டணும். பனமரமும், கார முள்ளும், மழுக்காரையும், பூஞ்சட்டையும் கொண்ட வானம் பாத்த பூமி. மலையடி சாரல் மாதம் மும்மாரியா பெஞ்சதால காணம், பயறு, உளுந்து, எள்ளு, சாம, தின பயிர்களபோட்டு உழைச்சி. நிலத்த சமபடுத்தி, இரண்டு கி.மீ. தூரமுள்ள பள்ளத்தாவுல நாடாங்கிணத்த வெட்டி தண்ணியெடுத்து தலைச்சுமடுல கொண்டு வந்து ஒவ்வொரு மரங்களா வளர்த்து வளர்த்து தன்னிலையை உயர்த்தியிருக்காரு. ஊர மொத மொத உருவாக்கின மனுசண்ணுயதாலயும், திருச்செந்தூர் கோயிலோடுள்ள தொடர்பும், சித்தர் நிலையில் வாழ்ந்ததாலயும் நன்றிக்கடனா, மாசி மாசம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கொடியேறியதிலிருந்து தேரோட்டம் வரை அவரது பின்காமிங்க மீனு கீனு வாங்காம சுத்த பத்தமாயிருந்து இந்த பாய்சம் வைப்ப நடத்துயாங்க. வீட்டுலயும் அன்னதானம் நடத்தி வணங்குயதும் உண்டு.

 

நம்ம எல்லாம் காறு வண்டியில போறது மாதிரி கண்ணையா கட்ட மங்கட்டையில ஏறிஇருந்துகிட்டு குதிரை ஓட்டுயது மாதிரி, இரண்டு கைய உயர்த்தி சொடக்கினதும் மங்கட்டை குதிரையாய் எழும்பி ஓடுமாம். அவரும் அதில் திருச்செந்தூர் சென்று முருகனை கும்பிட்டுகிட்டு வாறது வழக்கமாம், என்று பேசிக் கொண்டிருக்கும் போதே வைத்தியர் சமாதி பூசையை தொடங்கினார். அனைவரும் பக்தியோடு கைகுவித்து வணங்கினர். திருநீற பூசிகிட்டு மட்டுப்பாவு வீட்டுகாரரு முத்தத்தில், மொத்த மக்களும் வரிசையாக இருந்தனர். அனைவருக்கும் பச்சை பனை ஓலை பட்டை வழங்கி கொண்டிருக்க, குமாரவேலு தாத்தா பாய்சத்தை கோரி குடிக்க பிலா இலையை விழம்பினார். பனைஓலை தோண்டியிலிலிருந்து பட்டையில் பாயாசம் விடும்போது எழும் ஆவியும், பச்சை ஓலையில் சுடுபாயாசம் பட்ட வாசனையும், பலா இலையில் கிண்ணி பிடித்து பாயாசத்தை வாயில் வைக்கும் போது நாக்கு சுடும் சூடும் வயது வேறு பாடின்றி ஐந்து ஆறு பட்டை பாயாசத்தை ருசித்து குடிப்பதை பார்த்த பரவசமும், இன்று அவசர வீடுகளில் மதுவாத நோயினால் (Diabetics) பாயாசம் தவிர்த்து, உண்பதையும் நினைக்கும் போது நெஞ்சம் கனக்கின்றது. சிறுவர்கள் வயிறுமுட்ட பாயசம் குடித்தவாறு தவளைச் சங்கூதியை நினைத்து

 

பம்பா

பப பம்பா

பம்பா…… பம்பா என கூக் குரலெழுப்பியவாறு குதியாட்டம் போட்டனர்.

 

தவளைச் சங்கூதி செத்த பொறவு, அவர் பெண்சாதி தாம்பாளத்தில் சங்கை வைத்துக் கொண்டு இடது கையில் வட்டமான தோசை மணியை அடிச்சிக்கிட்டு முருகர் பாடலைப் பாடி தானம் வாங்கி சென்றார். ஆனா இப்போ சங்கு சத்தமுமில்லை, அவரு சம்சாரத்தின் மணிச்சத்தமும் இல்லை, ஈசான்தங்கு கொண்டை சாமியார் வந்து குறிப்பிட்டால சில வீட்டுல பாட்டு பாடி தானம் வாங்கிப் போனாரு. ஆனா இப்போ அவரும் இல்ல. தவளச்சங்கு சத்தமும் இல்ல. சனங்களின் ஆரவாரமும் இல்லை. கருக்காவிளை பாய்சம் காய்ப்பு குட்டுவத்துல தொடர்ந்து நடக்கத்தான் செய்வு. குடிக்கத்தான் ஆள் இல்ல……

                                                            வைத்தியர் மகன்

         வே. ஆறுமுக வேலப்பன்

Comments

  1. வாவ்..பிரம்மாதம். மிக மிக அருமை.அந்த நாட்களில் பாயாசம் குடித்த நியாபகம் வந்து விட்டது.அதுவும் பனையோலை பட்டையில்..., நன்றி.

    ReplyDelete
  2. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. கதைகள் அனைத்துமே அருமை

    ReplyDelete
  4. இளைய தலைமுறையினர் கேட்க வேண்டிய கதை செவிவழி கதைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்த மைக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete

Post a Comment