இனிச்சாம்புளி
இனிச்சாம்புளி
கோடடைப்பு லீவுண்ணி சொன்னாலே பள்ளிப் புள்ளையளுக்கு ஒரே பெகளம் தான். மணி இரண்டிருக்கும், உச்சி வெயில் கொஞ்சம் சூடு தணிய ஆரம்பிச்சு. ஏ கோவாலு….. ஏ கோவாலு மீனாட்சி மாமி மொவன் சோறு தின்ன வரல்லையின்ணி கூப்பாடு போட்டு கூப்பிட்டாவ. இனிச்சாம்புளி அந்த பக்கத்து மக்களுக்கு கோடைக்கு சுகம் தரும் கற்பக விருச்சம். ஆகாயத்தை வசமாக்கி ஆதவன் ஒளியை சிறைபிடித்து வைத்தது போல் நிழலுக்கு பஞ்சமில்லை.
நேரப்போக்குக்கு சுந்தரம்மயினி, தங்கம், செல்லம்மை, பொன்னம்மையோட எட்டு பத்து பொம்பளய கால நீட்டி போட்டு உக்காந்து வீட்டு சோலிய இந்த நிழல்ல இருந்து செய்யது வழக்கமா போச்சி. பீத்த கால் சட்டையை போட்டுகிட்டு பொட்டும் பொடியுமா பத்து பதினைஞ்சு பிள்ளையளுவ விதவிதமான விளையாட்டுகள விளையாடி தள்ளும்.
இனிச்சாம்புளி அனைத்தையும் வேடிக்கை பார்த்தவாறு நூறு வருஷமா நின்று கொண்டிருக்கு. மூணு நாலு பேரு கொண்டு ஆவி கட்டினாலும் பிடிக்க முடியாது. அவ்வளவு பெரிய மரம். பேருதான் புளிய மரம். ஆனா அந்த புளியம்பழம் தேன் போல இனிக்கும். விழுந்த பழத்தை எடுக்க போட்டி பலமா இருக்கும்.
சின்னம்ம பாட்டி சுளவு (முறம்) நிறைய புளிய வீட்டிலிருந்து கொண்டு வந்து கால நீட்டிப் போட்டு மடியில வச்சி புளி குத்தியால குத்தி கொட்டைய எடுத்துக்கிட்டு இருந்தாவ. அரிகோவாலு, முத்துமணி, பாண்டிராசா, திருமலை, செல்லத்தங்கம், பாட்டியை சுத்தி வந்து இருந்துகிட்டு பாட்டி பாட்டு ஒரு கத சொல்லித் தாங்க பாட்டிண்ணதும். பாட்டிக்கு கதைக்கு பஞ்சமேயிருக்காது.
பாட்டி புளியை குத்தி கிட்டே கத சொல்ல எத்தனிச்சதும், இனிச்சாம் புளிக்கு பக்கத்தில நின்ன ரண்டு பன கிளரமுள்ள இலுப்பை மரத்திலயிருந்து ஒரு குருவி சத்தம் போட்டு கிட்டேயிருந்தது. கோவாலு அன்னா ஒரு குருவி சத்தம் போடுவுல்லியா அது என்ன சொல்லி சத்தம் போடுவு சொல்லு பாப்போம் என்று பாட்டி கேட்டதும், கோவாலு செம்புவம்-ண்ணி சொன்னதும் முத்துமணி கிக்கி கீ-ண்ணி சிரிச்சான். பாட்டி அத பத்தின கதையை தான் நான் இன்னக்கி செல்லுயேன்.
உடனே பயலுவ முதுகு நிமிர்த்தி உட்கார்ந்தானுவ. ஒரு காட்டுல ஒரு பெரிய பிலாமரம். மரத்துல நிறைய பச்சி பறவயெல்லாம் தங்கியிருந்தாம். ஒர கூட்டுல அண்ணன், தம்பி ரண்டு குருவி இருந்துச்சாம். தினசரி அண்ணன் குருவி இரைதேடப் போயி இரையை கொண்டு தம்பி குருவிகிட்ட குடுக்குமாம். தம்பிக் குருவி பத்திரமா பாதுகாத்து சேர்ந்து சாப்பிடுமாம். தம்பிக்குருவி வளர்ந்து பெரிசானதும் இரண்டு பேரும் இரைதேட போவுமாம். ஒரு நாள் காடெல்லாம் பூ பூத்து குலுங்கிச்சாம். இந்த அண்ணங்குருவிக்கு பூ மேல ஒரு மயக்கமா இருந்திச்சாம். அண்ணக்கி இர தேடிட்டு வந்த பொறவு, அண்ணங் குருவி சொல்லிச்சாம். நிறைய முல்லப்பூ பூத்து கிடக்கு நான் போய் பறிச்சிட்டு வாரேண்ணி சொல்லி கூட்டுல இருந்த தேங்கா சிரட்டை நிறைய பூவ பறிச்சு நிரப்பி வச்சிட்டு, தம்பிக் குருவிகிட்ட பத்திரமா பாத்துக்க, நான் போயி நம்ம அத்த பொண்ண கூட்டிட்டு வாறேண்ணு பறந்திடுச்சாம். நேரம் ஆக ஆக சிரட்டையில இருந்த பூ அளவு குறஞ்சுகிட்டே இருந்துச்சாம். சாயந்தரம் அண்ணங் குருவி அத்தப் பொண் குருவியோட வந்துச்சாம். கதயில மூழ்கியிருந்த திருமலை வாயில கோழா அறியாம வடிஞ்சத பாத்த பாண்டிராசா கொல்லுண்ணி சிரிச்சிட்டான்.
அண்ணங்குருவி, தம்பி குருவியிடம் சிரட்டை நிறைய பூ தந்தேன். இப்போ பாதி தான இருக்கு. மீதி எங்க-ண்ணி கேட்டதும், தம்பிக் குருவி பயந்து கிட்டே அண்ணே நீ தந்த பூ அப்பிடியே இருக்கு. நான் பத்திரமா பாத்துக்கிட்டேன் வேற ஒண்ணும் செய்யலண்ணே-ண்ணி பாவம் போல சொல்லுச்சாம்.
அண்ணங்குருவி பாதி பூ எங்க-ண்ணி வீறாப்பா தம்பிக் குருவிய கொத்து கொத்துண்ணி கொத்துச்சாம். தம்பிக்குருவி கேவி கேவி அழுதுச்சாம். அண்ணே நீ தந்த பூ அப்படியே இருக்கு, அப்படித்தான் இருக்கு-ண்ணி சொல்ல சொல்ல ஆவேசமா கொத்தி கொதறிட்டு. இத பார்த்த அத்த பொண்ணு குருவி அய்யோ-ண்ணி அலறிகிட்டு ஒடிச்சாம். பாவம் தம்பிக்குருவி செத்து கீழே விழுந்துச்சாம்.
அண்ணங்குருவி தம்பீ, தம்பீ-ண்ணி அழுது அரற்றுதை கண்டு, ஒரு பச்ச கிளி வந்து நடந்தத கேட்டுகிட்டு, அட முட்டாப் பயலே யோசனையில்லாம கொழுந்தியா மோகத்துல தம்பிய அனியாயமா கொன்னுபுட்டியே என்று பறந்துபோய் கொஞ்சம் தண்ணிய கொண்டு வந்து வாடிப்போன பூ மேல தொளிச்சி லேசா கிண்டி விட்டது. கொஞ்ச நேரத்துல வெயில்ல வாடிப்போன பூவு தண்ணிய கண்டதும் அப்படியே பழய அளவுக்கு வந்ததாம். ஐயோ யோசனையில்லாம…... தம்பிக் குருவிய சுத்தி சுத்தி வந்து அண்ணங்குருவி, தம்பி தம்பிடோ…... சித்திர குட்டிடோ…... பூ ஒத்துடோ…… பூ ஒத்துடோ-ண்ணி சத்தம் போட ஆரம்பிச்சது இண்ணைக்கி வரைக்கும் கத்திக்கிட்டே தான் இருக்கு. தம்பியை கொன்ன பாவத்துக்காவ இண்ணைக்கும் அந்த குருவிய தம்பிக்குருவி-ண்ணி தான் எல்லாரும் கூப்புடுவாவ. லே கோவாலு அங்க கேட்குவு பாருலண்ணி முத்துமணி சொல்ல…..
தம்பி தம்பிடோ
சித்திர குட்டிடோ
பூ ஒத்துடோ
பூ ஒத்துடோ………... என்று
அனைவரும் அந்த ஒலியை உரக்க ஒலித்தவாறு ஓடோடி தத்தமது வீடுகளுக்கு சென்றனர்.


Appa such a beautiful story!! Sad and touching story ❤
ReplyDeleteசிறு வயதில் அதிகமாக கேட்ட கதை. மிக அருமையான பதிவு. தொடர்க உங்கள் முயர்ச்சி கள்
ReplyDelete