அம்மங்கொட
அம்மங்கொட
யம்மோ ஐயா இருக்காவுளா? நாளைக்கு சாயந்தரம் ஆறுமணிக்கு அம்மங் கொடவரி எழுத ஊர்கூட்டமாம். ஐயா வந்ததும் சொல்லிருங்க. குடிமொவன் செவலிங்கம் சொல்லிப்புட்டு, திண்ணயில் பதச்சிவச்சிருந்த வெத்திலகல்லுல, மடிக்குள்ள இருந்த வெத்தில மடக்க பிரித்து, உடப்பு வெத்திலையில செத்தோல சுண்ணாம்ப தடவி, கோறபாக்கு துண்டையும் சேத்துவச்சி நாலு தல்லுதல்லி வாயிலபோட்டு மென்னிகிட்டே, நறுக்கி வச்சிருந்த யாப்பாணபோயில நெட்டுதுண்ட அண்ணாந்து வாயில போட்டுட்டு, தலைத்துண்டை உதறி தோளுல போட்டுக்கிட்டு, அடுத்த வீட்டுக்கு சேதி சொல்ல போனான்.
ஊருல கன்னில வடக்கோமா மூணுபக்க சுவரும், முன்பக்கம் மரஅளியும், கதவும், பனங்கம்பினாலான மோட்டுக் கூரையும், அதுக்கு முன்னால தென்வடலா ஆறு கல்தூணும் அதுக்குமேல பனங்கம்புல உள்ள ஓட்டுமண்டபமும் கொண்டது தான் அம்மங்கோவில். பீடங்கள் எல்லாம் செம்மண்ணாலானது. ஆறு கல்தூணுல ஒரு தூணு சொள்ளமாடசாமி (சுடலைமாடசாமி). அந்த தூணுக்கு அடியில படுக்கை போட மண்பீடம் இருந்துச்சி.
ஒடுக்கத்து செவ்வாகிழமை (தமிழ் மாத கடைசி செவ்வாய்) மட்டும் நடையை திறந்து வெளக்கு வைக்கியது பழக்கமா இருந்தது. பூசாரியார் உத்ராடம் மத்தியானமே கோயில கூட்டி பெருக்கி சுத்தப்படுத்தி அந்தி கருக்கலில் விளக்கேத்தினாரு. ஒவ்வொரு படுக்கையிலயும் இலைபோட்டு வெத்திலயும், காஞ்சபாக்கும், பாளையங்கோட்டான் பழமும் சாம்பிராணி புகை காட்டி வச்சாரு. அடுப்புல வெங்கல உருளியை வச்சி பாயாசம் வைக்க தொடங்கினார். பூக்காரன் உலவமுத்து ஒரு பந்து பிச்சி பூவும், விடுபூவும் ரண்டு ஆரமும் கொண்டு குடுத்துட்டு போனான்.
கருக்கல் ஆனதும் குடிமொவனும், நாராயணசாமியும் கோயிலுக்குப் புறப்பட்டாவ. குடிமொவன் கையில் பெட்ரோமாக்ஸ் லைட்டும், அத தொங்கப்போட வளைஞ்ச கம்பியும் இருந்தது. நாராயணசாமி கையில ஒரு காக்கிப்பை. பைக்குள்ள கணக்கு நோட்டு. கோயில் மண்டபத்தில தொங்கவிட்ட பெட்ரோமாக்ஸ் லைட் வெள்ளவெளிச்சத்தை அள்ளி இறைத்தது. வண்டு, பூச்சியெல்லாம் வலியவந்து விளக்குலமோதி உயிரவிட்டது.
ஏழு மணிக்குள்ள இருபது பேருகிட்ட வந்திருந்தாவ. சுசீந்திரன் வாத்தியாரும், துரைஐயாவும் பண்டுபணத்த பிரிச்சாவ. தலைவர் தங்கமணி ஐநூறுரூபா சீட்டை லேலம் போட்டாரு. கடும்போட்டியாயிருந்து, சீட்ட சுடலமணி முன்னூறுரூபா கொறச்சி இருநூறு ரூபாய்க்கு பிடிச்சதும், அப்பனடிமை ரூபாய எண்ணி கொடுக்கபோச்சுல போனவருச வரிபாக்கிய எடுத்துகிட்டு குடுங்க என்றார் சிவனேஸ்வரன். ரூவா நாப்பத களிச்சு நூத்தி அறுவதுரூபாய வாங்கினார் சுடலமணி.
பெரியகண்ணு தொண்டைய கனச்சிகிட்டு பண்டுகணக்கு முடிஞ்சா? போன கொடைக்கு வரி எவ்வளவு போட்டிருந்து? வரவு என்ன! செலவு என்ன, கைபிடித்தம் உண்டா ! சொல்லுதம்பி என்றதும், தலைவர் தங்கமணி வரவு செலவு வாசித்து முடித்தார். போனதடவை நாப்பதுரூபா வரி. இந்த தடவை கொஞ்சம் கூட போடணும், சுசீந்திரன் வாத்தியாரு பேசிமுடிக்கியதுக்குள்ள, உமக்கென்ன மாச சம்பளம், எங்களுக்குல்ல தெரியும் என்று பாலையா பதிலுரைத்தார். பத்துரூபா கூட்டி ஐம்பதுரூபாயா போடுங்க என்று முருகபெருமாள் சொல்ல, கொஞ்சம் கருவுருப்புக்கு பொறவு கூட்டம் சம்மதிச்சு.
வில்லுபாட்டு, கடுக்கரைமஹாதேவன்பிள்ளை-க்கு கொடுப்போம் என்ற நாராயணசாமி பேச்சுக்கு மறுப்பில்ல. முன்ன பின்ன செலவு வந்தாலும் அவரு கையதானபொறுக்கும்.... அப்போ! பொம்பளபாட்டு கிடையாதா? சாமிஐயாவின் கேள்விக்கு சின்னப்பயவளுக்கு என்னல பேச்சு? அதட்டினார் சிவபெருமான். பாட்டுக்கு பெரியசெட்டுக்கு கொடுத்தா, ஸ்பீக்கர் செட்டுக்கு தங்கம் சவுண்ட்ஸ்க்கு கொடுங்க. அவன்தான் எல்லா லைட்டயும் எரியவச்சி கலக்கிப்பிடுவான், மிட்டாய்செல்லத்தின் கருத்துக்கு மறுப்பில்ல. தங்கம் செட்காரன் தான் ஸ்டெப்அப் வச்சி பாட்டு சத்தம் வெளியே கேக்கும் படியா செய்வான். வால்டேஜ் கொறவுண்ணாலும், தெருவிளக்கு கம்பியில கொழுத்திப்போட்டு சமாளிச்சுப்பிடுவான் என்று கூடுதலா தாங்கிப்பிடித்தான் சாமிநாதன். கொளுத்தி போடுயது எல்லாம் சரிதான்! மாட்டிகிட்டா ஊரு பொறுப்பேக்க முடியாது என்று சின்னய்யா சொன்னதும், ரண்டு மூணு வீட்டுல இருந்தும் கரண்டு எடுக்கணும். இருட்டுன பொறவு தெருவிளக்கு லைன்ல நல்ல நேக்கா கொழுத்தி போட்டுகிட்டு விடியதுக்குள்ள எடுத்துட்டா ஒண்ணுமில்ல என்றார் குருசாமி. தங்கம் செட்டுக்கு குடுக்க முடிவாச்சு.
கொலவாழ நிறைய கட்டணும் என்ற ஆடலரசு கோரிக்கையும் ஏத்துகிட்டாவ. பங்குனி பதினாலும், பதினஞ்சும் கொட. எல்லாரும் வரிபணத்த கொடுத்திரணும். இன்னும் ஒரு மாசந்தான் இருக்கு. எல்லாரும் சேர்ந்து நல்லா நடத்திருவோம், தங்கமணி சொல்லி முடிக்கவும், பெட்ரோமாக்ஸ்லைட் பட்டுன்னு பம்முச்சி. லைட்ட கொக்கியில இருந்து எடுத்து கீழவச்சி அடிபக்கத்த அமுக்கி பிடிச்சுட்டான் செல்லப்பன். குடிமொவன் மெதுவா பம்ப் அடிக்க லைட் பிரகாசிச்சு.
பூசாரி பூசை குடுக்க கை மணிய அடிச்சதும், மணிராஜ் நேக்கா பெரிய மணியடிக்கிய கயிற கைப்பற்றி மணியடித்தார். சாம்பிறாணிபுகை சுழல்விட்டு பெருகி மூக்குக்கு வாசனையும் கண்ணுக்கு எரிச்சலும் தந்தது. எல்லாரும் பக்தியுடன் சாமிய னெனச்சி, சூடத்த தொட்டு கும்பிட்டு,விபூதியை நெத்தியில் பட்டையா பூசிகிட்டு, மண்டபத்துல கீழ கடல்மணல்ல இருந்தார்கள். தங்கநாதனும் தாணுமாலையும் வாழையிலையை கொடுத்து, பாயாசம் விளம்பினாவ. பாயசத்த சாப்பிட்டு முடிச்சதும், குடிமொவன் பெட்ரோமாக்ஸ்லைட்டை எடுத்துவிட்டு முன்னாலபோவ எல்லோரும் அந்த வெளிச்சத்துல ஒத்தையடி பாதை வழியா வந்து இடுவை வழியா வீட்டுக்கு போனாவ.
பள்ளி புள்ளையளுவ வெயில்நேரத்துல கோவில்மண்டபத்துல குளுமையா இருக்கதுனால வந்து கள்ளன் போலீஸ், பாட்டம் போன்ற விளையாட்டு விளையாடுவாவ. ஒவ்வொரு கல்தூண் மூட்டிலும் கோழியான் மண்ணுக்குள்ள இருந்து குழிபறிச்சு புனல்மாதிரி வச்சுருக்கும். அத கிண்டி பார்த்தா உள்ளாலகோழியான் இருக்கும். ஒரு நாளு தர்மசுந்தரம் வாத்தியாரு பள்ளிகூடத்து பரிட்சபேப்பர கோவில்ல கொண்டுவச்சு செத்த காத்தோட்டமா இருந்து திருத்திகிட்டு இருந்தாரு. விளாயாடிகிட்டு இருந்த பயவ வாத்தியாருக்க பரிச்ச பேப்பருக்கு மேலோடி கடல் மண்ண அள்ளி போட்டுட்டானுவ. வாத்தியாரு போட்ட கெட்டவார்த்த அறுப்புல ஒரு நாதியும் அனக்கமில்ல. எடுத்து வச்சுட்டு ஓடிட்டானுவ.
பங்குனி மாசம் பெறந்ததும் கொடைக்க பெகளம் தொடங்கிட்டு. ஆளாளுக்கு முடஞ்சு வச்ச தென்னவோல கிடுவும், பெர கட்டுய கம்பும் கொண்டு வந்து, கோவில்ல போட்டுட்டு போனாவ. ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் வந்துருங்க. இன்னும் எட்டு நாள் தான் இருக்கு என ஓர்ம(ஞாபகம்) படுத்தினார் நாராயணசாமி.
ஞாயிற்றுக்கிழமை காலைல எட்டு மணிக்கே வந்து குண்டு தோண்டியதும், கன்னிமூலையில ஒரு வேப்பங்கம்புல மஞ்சள் தடவி வெத்திலையும் மஞ்சளும் வச்சு நூலால சுத்தி கட்டி, பூசாரி உத்ராடம், சாம்பிராணி புகையை காட்டினார். வந்திருந்த பெரிய ஆளுவ பந்த கால நாட்டி முடிச்சதும், வேலை பரபரா நடந்துச்சு.
கோமேதகம் ரெண்டு நீள பச்சவோலைய வெட்டி, தீயில போட்டு வாட்டி, வாட்டாக்கு ரெடி பன்னுனாரு. பெரியசாமி தென்னநார உரிச்சுகிட்டு வந்தாரு. தூணு நாட்டி மோட்டு கம்பு, வாரி கம்பு எல்லாம் கட்டி முடித்தார்கள்.
மதிய சாப்பாடு முடிச்சுட்டு மீதி வேலைய செய்வோம்....ண்ணி எல்லாரும் அவரவர் வீட்டுக்கு போனாவ. சாயந்தரம் காவணம் சுத்து கெட்டு வேலையெல்லாம் முடிஞ்சிபோச்சு.
வெள்ளிக்கிழமை குடிமொவன் செவலிங்கமும் சாமிகண்ணும், மேல்மண்ணை ஒதுக்கிகிட்டு சவுக்கமா குண்டு வெட்டி, தண்ணி ஊத்தி, செம்மண்ணசமுட்டி கொழச்சி சாந்துமாதிரி தயாராக்கினார். சாமிகண்ணு வெட்டரிவாளும், மண்வெட்டியும் வச்சே அழகா பூசி பீடத்திற்கு இறுதி வடிவம் கொடுத்தார். காலசாமி பீடத்தையும், பைரவநாதசாமி பீடத்தையும் உயரமா மண்சாந்த கூட்டி, உச்சியில் அரையடி வீதியில சதுரமா வச்சு, கீழே வரவர அரையடி கூட்டி, சுத்தோடு சுத்தா ஏழு படி வச்சி, உச்சியில் உள்ள சதுர கட்டத்துல தென்னம்பூவ நாட்டி விட துவாரமும் போட்டு ஒரு சிற்பியுடைய கலை நயத்தோடு வேலையை முடித்தார்கள்.
பீடம் காத்துல கொஞ்சம் வாடுன பிறகு, மண் தொட்டியில் சுண்ணாம்பு சங்கை நீற்றி, வெத்தில போடுயதுக்கு கொஞ்சம் சுண்ணாம்ப மண் கலயத்துல எடுத்து வச்சார். தொட்டியில் இருந்த சுண்ணாம்ப தண்ணிவிட்டு கலக்கி, இரண்டு வேப்பங்கொளைய முறிச்சி கலக்குன சுண்னாம்புல முக்கி மண்பீடங்களில் தெளிச்சதும் பீடங்கள் எல்லாம் புதுமை பாய்ந்தது.
திருவிழாவுக்கு வாழைக்குலைகளை பழுக்கவைக்க உறக்குண்ட ரெடியாக்கினார் தங்கையாவும், பொன்னம்பெருமாளும். நீள, அகலத்தோட குண்டு வெட்டி வாழை கரிஇலைய அடியிலபோட்டு வாழக்குலைய அடுக்கி, குலைகளுக்கு மேலையும், வாழைகரியிலைகளை போட்டு செம்மண்ண குழச்சி கவர்பண்ணி ஒருஅற்றத்துல கலச்சத்துக்குள் தேங்காசவுரிய வச்சு, கலசத்தில் வட்டமா துவாரம் போட்டு, தொழிசாந்தால் கவர் செய்து, துவாரத்துக்குள் தீக்கங்கை போட்டு நல்ல காற்றைஊதி புகைய உண்டாக்கிவிட்டு துவாரத்தை அடைத்து விட்டார்கள். இப்படி இரண்டுநாள் ஊதி புகை மூட்டம் போட்டுவிட்டு உறையை பிரித்து எடுத்தால் வாழைகுலை பருவமாக பழுத்துவிடும்.
கோவிலுக்கு முன்னுக்கு வரிசையா திருவிழாகடை கட்ட தொடங்குனாவ. வழக்கமா பால்பாண்டியும், பொன்னுமணியும் கெட்டுவானுவ. இந்த தடவ நூதனவில்லுபாட்டு இல்லையா? நல்ல கூட்டம் வரும் என்று நாலுகடைக்கு மேல வந்திரும் போலுக்க ! புல்லசெதுக்கி தடம் தீச்ச தனபாலு ஒருகடைய சம்முன்னு கட்டி, கடைநிறைய சரக்க (சோடா பாட்டில், கலர் பாட்டில், பன்னீர் பாட்டில், சர்பெத் பாட்டில், ட்சாக்லேட், பீடி சுருட்டு, மிட்டாய், பொரிஉருண்ட, ஊத்தாம்பெட்டி (பலூன்), நொங்குகுல, பழகொல, புறுக்கிசக்க. (அன்னாசி) )என கட ஜோரா இருந்து. லே ! தனபாலு என்ன கட முழிப்பா இருக்குடே!என்றதும் லாட்டரி கீட்டரி அடிச்சதா என்றார் பழனியப்பன். தனபாலுக்க பொண்டாட்டி (பஞ்சவர்ணத்துக்க) கழுத்து உருப்படிய பணயம்வச்ச பணம்......ண்ணி ஊருக்கு தெரியுமா? தனபாலு மனசில உருப்படி மீழுமா, முழுவுமா?....ண்ணி கேள்விகுறியுடன் சிரித்தான்.
கோயிலுக்கு கொலவாழ கட்டுயதுல கடும் போட்டி ஆயிட்டு. பாளையங்க்கோட்டான், ரசகதலி, நற்கதலி, வெள்ளதொழுவன், பூங்கதலி, மட்டி,செம்மட்டி, செந்தொழுவன், சிங்கன், கூம்பில்லாசிங்கன் , யேத்தன், பேயன், மொந்தன், ரூபெஸ்டா என வரிக்கு ஒரு மொறட்டு கொலவாழைய கெட்டிபுட்டானுவ.
லே ! பீக்கர்காரன் வந்துட்டான் டே...ண்ணி மூக்குபூறிகணேசன் சத்தம்போட்டதும் , குஞ்சு குளூவான் எல்லாம் வடக்குஓடைல கூடிச்சு. ஸ்பீக்கர்காரன் நாலுபேரு லோடுகேரியல் சைக்கிள்ல அவனுவ உயரத்தவிட உயரமா டீப்லைட், ப்ளேயர், ஸ்டெப்அப், குழாய், மைக்ஸ்டாண்ட் எல்லாம் அள்ளீகட்டிக்கிட்டு வந்திருந்தானுவ. சைக்கிள ஸ்டாண்ட்போட்டு கயித்த அவுக்கயதுக்குள்ள ஒவ்வொருபொருளயும் நம்ம பயலுவளே வாங்கி கோவில்ல கொண்டுவச்சானுவ.
ஸ்பீக்கர்குழாய கொண்டுபோறதுக்கு மல்லுகட்டிடானுவ. செல்லதுரை ஒரு குழாய வசமா எடுத்துட்டு அலோ அலோ...ண்ணி போட்ட சத்தம் ஒருபன உயரத்துக்கு கேட்டிருக்கும். ஸ்பீக்கர்செட்காரனுக எள்ளு...ண்ணி சொல்லுயதுக்குள்ள பயலுவ எண்ணயாத்தான் நின்னானுவ.
ஓரளவு வேலமுடிஞ்சதும் ஒருபீடியை எடுத்து பத்தவச்சி வாயில புகைய இழுத்துவிட்டு ரிக்கார்டுபிளேயர ஓடவிட்டு, கைப்பிடி முனையிலயிருந்த செம்பு ஊசிய பிடுங்கி தூரபோட்டதும், முருகேசன் எடுத்து ஒரு காலி தீப்பெட்டிக்குள்ள பதுக்கிகிட்டான். புது ஊசியை மாட்டி சுத்திகிட்டிருந்த கறுப்புகலர் ரிக்கார்டுக்குமேல ஒருவிளிம்புல கைப்பிடியை வச்சதும் ஊசி ரிக்கார்டுலஉரசி ப்பிப்பிபி பிபீ என எழுப்பிய மேளசத்தம் ஊரை தட்டி எழுப்பியது.
முத்துசாமி மைக்குல வில்லுபாட்டுகாற உடனடியாக கோவிலுக்கு வரவும் ! என கட்டளையிட்டான். பாட்டுக்கார, ஸ்பீக்கர்செட்கார, குடிமொவனுவ எல்லாத்துக்கும் மூணுனாளும் காப்பி சாப்பாடு கொடுக்க ராமன்தம்பி லேலம் பிடிச்சியிருந்தார். ஸ்பீக்கர் செட்காரனிடம், ராமன்தம்பி வீட்டுக்கு ரண்டு டீப்லைட்டும், திருவிழா கடைகளிலும் ஒவ்வொரு டீப்லைட் கட்டிக் குடுக்கசொல்லி உத்தரவுயிட்டார் அப்பாத்துரை.
பாட்டுக்கார ஆடி அசஞ்சி வந்து சாமிய கும்பிட்டுகிட்டு, பாட்டுசாவடியில பிள்ளையார்முகம் வச்சி, பூச கொடுத்துட்டு, ஐயா வில்லு பூட்டுவமா என்றதும் முருகபெருமாள் ம்ம்ம்ம்- என்றார். வில்லை வளைத்து கட்டி, வைக்கோல் சும்மாடு பீடத்தில் குடத்தை வைத்து குடத்தின் கழுத்தை வில்லோடு சேர்த்து கட்டி, வில் சரிந்து விடாமல் இருக்க குடம் அடிப்பவரின் கால்விரலிலும், வலதுபக்கம் இருந்து பாடும் ஆசானின் கால் பெருவிரலிலும் இணைப்பு கயிற்றை மாட்டினார். பின் வரிசையில் பக்க பாட்டுக்காரர்கள் கையில் ஒடுக்கு, சிங்கி, ஆர்மோனியபெட்டி வைத்து ரெடியானார்கள். பாட்டு கேட்கவும், பாக்கவும் ஆட்கள் வந்து உட்கார ஆரம்பித்தார்கள். பெரியவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டு தந்தனத்தோம் என்று சொல்லியே வந்தனம் பாட, என வில்லிசை தொடங்கியது. பிள்ளையார்துதி, குருதுதி முடிந்ததும் பாட்டு சாஸ்தாகதையை நோக்கி தாவியது.
பாட்டுபாக்க குடும்பம் குடும்பமா விருந்து காறளோடு வந்தாவ. வந்ததும் சாமி கும்பிட்டுவிட்டு அவங்க அவங்க உறவினரின் குலைவாழையில் வேட்டி, டவ்வல், டர்க்கி, லுங்கி, என ஏதாவது ஒண்ண கட்டிவிட்டு அமர்ந்தார்கள். சாமித்துரைக்க வாழைக்குலையில காய்தெரியாம கோடி துணியாதான் கட்டியிருந்தது. அவருக்கு மச்சினன் ரண்டுரூவாநோட்ட ஊக்குல கோர்த்து ஒரு பணமாலையாக்கி போட்டாரு. எல்லார் கண்ணும் அந்தகுலைய ஒரு பார்வ பார்க்கதான் செய்தது. அந்தசிங்கன் குல யாருக்க? சின்னதம்பிக்க. அறுத்த கைக்கு சுண்ணாம்பு வைக்கமாட்டான். பொறவு எவன் ஓய் அவனுக்க கொலைக்கு துணிகட்டுவான் என்றார் சொள்ளமாடன்(சுடலைமாடன்). சின்னதம்பிக்க குலை மட்டும் பிறந்தமேனியாட்டம் நின்னுகிட்டிருந்தது.
திருவிழாகடையில் வியாபாரம் சூடுபிடித்தது. விருந்தினர்கள், நண்பர்களுக்கு ஒரு சர்பத் வாங்கி கொடுத்தால்தான் மரியாதையாக கருதப்பட்ட காலம். பெரிய கண்ணாடி கப்புல பாளையங்கோட்டான் பழத்துல இரண்டை உரித்துப்போட்டு நீள சில்வர்கரண்டியால்
டக்கு டக்குண்ணி குத்தி கடைஞ்சி, மூணு கரண்டி நொங்கும், ரண்டு கரண்டி புறுக்கி சக்கை(அன்னசிபழம்) யும் போட்டு, மூணுகரண்டி சிவப்பு ராஜா சர்பத்தை ஊத்தி, ஒரு கலக்கு கலக்கி கொடுத்ததும், உறிஞ்சி குடிக்கும் போது வயிறு டம்...ண்ணி நிறஞ்சிடும் . தனபால் கடையில பட்டறையில(பணப்பெட்டி) பணம் விழுந்தது போல இல்ல ! தனபாலுக்க மொவன் தங்கரெத்னம் இருநூறாம் பக்கநோட்டுல பற்று எழுதி எழுதி கை ஓஞ்சி(வலி) போச்சு. பேப்பர்ல காத்தாடி செய்து ஈக்கல்ல ஒட்டி, முள்ளெடுத்த சீமைகள்ளி தண்டுல குத்திவச்சி வித்திகிட்டிருந்தான் கணபதி. காத்துல காத்தாடி சொய்ங்....ண்ணி கெறங்குச்சி(சுழன்றது).
கணபதிபுரத்து சுப்பையன் ஒரு கால்பெட்டியில சவ்வுமிட்டாய் பலநிறத்துல பரப்பி வச்சி வித்துகிட்டிருந்தார். ஐஸ்காரன் மரப்பெட்டிக்குள்ள ஐஸவச்சி கிலுக்கி சத்தம் எழுப்பி சாதா, சேமியா, சுக்குபால் ,கிரேப்ஸ் என விதவிதமா வித்துகிட்டுயிருந்தான்.
சாத்தாவு பனையில இருந்து விழுந்து ரண்டு காலும் நொண்டியாகி தடிக்கம்ப வச்சி ஊனி நடந்து வருவாரு. அவரு கொல்லாங்கொட்டைக்கும், பைசாவுக்கும் நிலக்கடலை குடுப்பாரு. ஒரு நீள மரசட்டத்துல வட்டமரப்பலகை சுற்றி சுழல்வது மாதிரி பொருந்தியிருக்கும். வட்டப்பலகைக்கு மேல் விளிம்பில் ஒரு சுற்று இரும்பு ஆணி தறையப்பட்டிருக்கும். ஆணியின் அடிப்பக்கம் 0,5,10,15 என நம்பரிடப்பட்டிருக்கும். பலகைக்கு பக்கத்தில ஒரு மரக்குச்சியில் பொருத்தப்பட்டுள்ள பனைஇலக்கு ஒன்று, சுழலும் மரப்பலகை ஆணியை தொட்டு உரவி ஒலி எழுப்பும். ஒரு முந்திரி கொட்டைக்கு அல்லது இரண்டு பைசாவுக்கு ஒரு சுற்றுசுற்ற அனுமதிக்கப்படும். சுழல் பலகை சுற்றி நிற்கும்போது இலக்கு காட்டும் என்ணத்தில் கடலை கொடுப்பார். எப்படி சுத்திவிட்டாலும் பெரும்பாலும் 0-15 –ஐ தான் காட்டும்.
தூரத்துல புன்னமரமூட்டுல கட்டஉருட்டு(மனைஅடி) , நடந்துகிட்டிருக்கு. மண்ணெண்ணெய் காடாவிளக்கு ரண்டு கரும்புகையை அள்ளி உமிழ்ந்து வெளிச்சத்தை பரப்பியது. சூரப்பள்ளம் கல்லுமுறிச்சான் தலையில வட்டகட்டு ஒண்ணு கட்டிகிட்டு மூணு அடிக்கு இரண்டரை அடிபலகையில ரண்டுவரிசையில நாலு நாலா எட்டுபடம் ஒட்டியிருக்கும். ஒருஇஞ்ச் கனத்துல ஆறுபட்டை கட்ட நாலு இருக்கும். ஆறுபக்கமும் பலகையில உள்ள படம் சிறிதா ஒட்டியிருக்கும். ஒரு டப்பாவினுள் சிறுகட்டைகளை போட்டு வலதுகையால் பல கோணத்தில் குலுக்கி, பெரிய பலகையின் நடுபகுதியில் கவிழ்த்துப் பிடித்ததும், சுற்றிநிற்கும் மனிதர்கள் அதிர்ஷ்டத்தை எதிர்நோக்கி பிடித்த படத்தில் பணத்தை அள்ளிப் போடுவார்கள். பணம் போட்டு முடிந்ததும்,கல்லுமுறிச்சான் மூடிய டப்பாவை விலக்கியதும், நான்கு கட்டைகளின் மேல்பகுதி வெற்றிமுகம் காட்டும். மிச்சகட்டத்தில உள்ள பணத்தை அள்ளி சுருட்டுவான்.
ராத்திரி பதினொருமணிவாக்குல ரண்டு போலீஸ்காறன்மாரு கையில லத்திகம்பும் டார்ச்லைட்டும் கொண்டு வாறத பாத்த ஆலங்கோட்டஅய்யாவு போலீஸ், போலீஸ் என்றதும், இலுப்பமரமூட்டுல சீட்டுகளிச்சிட்டு இருந்தவனுவளும் , புன்னமூட்டுல மனைஅடிச்சிட்டு இருந்தவனுவளும் காடாவிளக்க அணச்சிகிட்டு கைல கிடச்சத அள்ளிட்டு தலைதெறிக்க ஓடினானுவ. கல்லுமுறிச்சான் மன - கட்டையையும், காடாவிளக்கையும் தூக்கிட்டு ஓடுனத பாத்து, போலீசும் ஒருவிரட்டு விரட்டிச்சு. பிடிகிடைக்கல்ல.
போலீஸ்காரன்மாரு நாராயணசாமி பண்ணயார பாத்து, என்ன பண்ணயார இது? என ஒரு செல்ல கோபப்பட்டதும், தனபால்கடைல சர்பத்தும்,சிகரெட்டும் வாங்கி கொடுத்தார். பண்ணையார் போலீசின் கையை பிடித்து குலுக்கும்போது ஒருசிறுதொகை பரிமாற்றம் நடந்தது. போலீஸார் விசுவாசகும்பிடு போட்டுகிட்டு கிளம்பினர்.
கோயில்ல கூட்டம் நிரம்பி வழிஞ்சி. பாட்டு உச்சதாளகதியில சாஸ்தாகதை போய் கொண்டே இருந்தது. இருபதுரூபா நோட்டை ரெத்தினப்பெருமாள் கொண்டு பாட்டுக்காரருகிட்ட கொடுத்ததும், அதற்கு ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு பாட்டு தொடர்ந்தது. மணி ராத்திரிஒண்ணு. பல ஊர்ல இருந்தும் ஆட்கள் வந்திருந்தார்கள். எல்லாருடைய எண்ணமும் பார்வையும் சாமியாட்டத்தை எதிர்நோக்கியிருந்தது. வில்லுப்பாட்டுக்காரர்களுக்கும் பசியின் உந்துதலில் பாட்டு வேகம்கூடி போச்சு.
பூசாரி உத்ராடம் சாமியும், சாஸ்தாவும் இருக்கும் பீடத்தை பழக்குலை மற்றும் பூக்களால் படையலிட்டு முடிந்ததும் பூஜைக்கு ரெடியானார். சாஸ்தா கதை முக்காபருவம் தாண்டி போய்கொண்டிருந்தது. மாறி மாறி ரண்டு தடவ பூசாரி தீவார்ண (தீபாஅராதனை) கொடுத்து பாத்தாரு . சுற்றி நின்ற பல ஊர்காரர்களுடைய எண்ணத்திலும் பார்வையிலும் சாமி ஆடலயே என்ற ஏக்கமும் தெரிஞ்சுது. சாமி ஆட்டமும் வரல. சாமி ஆடியும் வரல.
போனதடவ தெய்வங்கொண்டாடிய கள்ளச்சாமி ஆடுயான், கள்ளச்சாமி ஆடுயான்...ண்ணி சொன்னானுவ, பொறவு எவன் ஓய் சூறுஉள்ளவன் ஆடுவான் என்று பலயமுத்து (பலவேஷமுத்து) விசனப்பட்டார்.பூச முடியதுக்குள்ள வெளியூர் சனங்க ஒறக்க சீணத்துல வீட்ட பாத்து விறு விறுண்ணி நடந்தார்கள்.
பாட்டுகாரன்மாரு பைய பாட்ட நெறுத்த மலங்க மலங்க முளிச்சது மாதிரி தெரிஞ்சி. மூப்புலுவ விடுமா? கத முடிய்யது வர பாடுங்க என்று புடிச்சிகிட்டார் சிவப்பிரகாசம். கூட்டம் புலுபுலு...ண்ணி கலைஞ்சிட்டு. கடைக்காரனுவ ஓலக்கிடுவ கடைக்குள்ள தரையில போட்டு உறங்க ஆரம்பிச்சாவ. ஒருவெத்திலதிங்கிய நேரம் கூடுதலா பாடிட்டு வில்லிசை முடிந்தது. புலவன்மாரு சாப்பாடு வீட்ட நோக்கி போன பொறவு, கோயில்ல பூசாரியும், காலு விளங்காத கடலகிறக்கி சாத்தாவும்தான் பாக்கி. தோர்த்த விரிச்சிகிட்டு பூசாரி உத்ராடம் உறங்கினாரு. இரண்டு நாயி சாமி படப்புல இருக்க பழத்த வாய் வச்ச வாறதும், சாத்தாவு தடிக்கம்ப எடுத்து ஓங்குயதும் தொடர்ந்தது. விடிய்யது வர கடலகிறக்கி சாத்தாவும், கோயிலும் அனக்கமில்லாம முளிச்சே இருந்தது.
செவ்வாய்க்கிழமை மதியம் உச்சக்கொடை உற்சாகமாக நடந்து வருகிறது. வில்லுப்பாட்டில் முத்தாரம்மன் கத விறுவிறுப்பாகி விரைந்தோடியது. சிறுவர் சிறுமிகள் புத்தாடையில் தந்தோஷத்தில் குதித்தனர். பலூன்வியாபாரி மூங்கில் தட்டியில் விதவிதமான ஊத்தாம்பெட்டிகளை ஊதி விற்றுக் கொண்டிருந்தான். வெளியூர் ஜனங்களின் கூட்டம் எக்கச்சக்கம். கோடைவெயில் கொளுத்தி தள்ளினாலும், அம்மங்கோயில சுத்தி மரசோலையா இருந்ததால் வெயில் வேகம் காட்ட முடியல்ல. மண்வளம் காக்கும் மகத்தான தெய்வம் முத்தாரம்மனுக்கு பூப்படையல்போட்டு பூசாரிஉத்ராடம் பூசைசெய்து முடிச்சதும் கூட்டம் கலைஞ்சி போச்சி.
கோயில்ல ஒரு கனமான வெங்கல கும்பா சட்டிய சண்முகவடிவு காட்டி, செல்லத்துரை இதுதான் தீச்சட்டி பாத்துக்க என்று அதன் விவரம்கூறினார். கட்ட விறவ போட்டு நல்லா கனகனா தீயவச்சி இந்த வெங்கல சட்டியை உள்ள வச்சிருவாவ. சட்டி செவசெவா பழுத்துக்கிட்டே இருக்கும். சட்டிக்கு உள்ளேயும் தீக்கங்கு நிறஞ்சி இருக்கும். யாராவது சாமி ஆடுனா இந்த சட்டியை எடுத்து கோயிலை மூணுசுத்துசுத்தி கொண்டுவைக்கணும். அப்படிவைக்க கழிவு இல்லண்ணா கள்ளச்சாமி பட்டம் கிடைச்சிபோகும். கொஞ்ச காலத்துக்கு முன்னால கோரப்பெருமா(குமாரப்பெருமாள்) சாமி ஆடும் போது தீச்சட்டிய எடுத்து சுத்தி வந்து வச்சாராம். இப்போ சாமியும் ஆடாது. சட்டியும் பழுக்காது.
பகல் மூணு மணிக்கு வாலிபப் பயிலுவ ஏழு பேரு சேர்ந்து வில்லுபாட்டு மேடையில பாட்டுக்காரள போல இருந்து, வில்லு குடம் சிங்கி உடுக்கு எல்லாம் அடிச்சி, வில்லுபாட்டு பாட ஆரம்பிச்சிட்டாவ. நல்லகாலம் மைக் வச்சி பாடல்ல. பாட்டு சத்தம் நல்ல ராகமா இருந்து. ஒரு மணி நேரம் பாடிகிட்டு அனக்கமில்லாம அப்படியே வச்சிட்டு போயிட்டானுவ.
அந்திக் கருக்கலில் காலசாமிக்கு பாடுயதுக்கு பாட்டுகாறவந்து பாட்டுமேடைய பாத்துட்டு, நாடார இதுசரியில்லிய. எங்க தொழிலுக்கு அவமானம்ல்லியா? என்று சிலாகிக்க, பெரிய ஆளுவ கூடி பாட்டுக்காறள, சின்ன பயவ தெரியாம செய்துட்டான், என்று சமாதானபடுத்தினார்கள். காலசாமி கதை(மார்க்கண்டேயன் கதை) பாட ஆரம்பித்தார்கள்.
ஒரு முக்காளி அடுப்புகூட்டி பெரியமண்பானைய வச்சி தண்ணீர்ஊற்றி, காவோலையால(பனமர காய்ந்த ஓலை) தீய மடமடா போட்டான் குடிமொவன். பூசாரி காலசாமிக்கு படையல் முடிஞ்சதும் பீடத்து உச்சியில ஒரு குலை தென்னம்பூவ சொருகி வச்சார். தண்ணி கொதிச்சிட்டு ஐயா ! என்று செவலிங்கம் சொன்னதும், பூசாரி மஞ்சள்தூளை கொட்டினார். வில்லுப்பாட்டு கதை மார்க்கண்டேயன் உயிர் பறிக்கும் கட்டத்துக்கு வந்துட்டு. பூசாரி பூசைகொடுக்கவும் பானை வெட்டிகொதிச்சு மஞ்சள்நுரை கூத்தாடி பொங்கி வடிஞ்சது. பெண்கள் குரவையிட பூசாரி கமுகம்பூவ எடுத்து மஞ்சள் பானைக்குள்ள முக்கி படைப்புல தெளிச்சிகிட்டு படையல் மீது வைத்தார். பூஜை முடிஞ்சதும் இரவு பூஜைக்கு வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு வருவோம் என அனைவரும் கிளம்பினர். எங்க கோயில்ல காலசாமி ஆடுனா சுடு மஞ்சதண்ணில கமுகம்பூவ முக்கி கோரிகுளிக்கும். படப்புல இருக்க வாழக்குலைகளை கையில தூக்கி பழத்த பிச்சி நாலா திசையிலும் எறியும். விழுந்த பழத்த எடுக்க கூட்டம் அலைமோதும். பழங்கள் சவுட்டுப்பட்டு தோல்போனதும் மண்ணுபுரண்டதுமா கிடைக்கும் என்று மகாலிங்கம் அவங்க ஊர் சாமியாட்டத்த இளையநாடான்கிட்ட வீராய்ப்பா சொன்னான்.
ராத்திரி சுடலைமாடசாமி கத விறுவிறுண்ணி போச்சி. நல்ல கூட்டம். மூணு மணிக்கு பூசை முடிஞ்சுது. கடைசில நாலுமணிக்கு யாக்கியம்மன்(இசக்கியம்மன்) கதை பாடி முடிச்சு , அஞ்சு மணிக்கு வாழிபாடி வில்லு அவுத்ததும், பேசினதொகையை விட அம்பதுரூபாய கூடுதல் கொடுத்தார் தலைவர் தங்கமணி. விடியமின ஆறுமணிக்கு படுக்கைய இளக்கி ஓலக்கிடுவ விரிச்சி, அதுக்கமேல எல்லாபழம், பூ, தேங்கா எல்லா கொண்டுவச்சி, பழத்த சீப்பு சீப்பா அறுத்து நூத்திஅறுபத்தைந்து வரி பங்கு வைகப்பட்டது. தலைவர் கூட அஞ்சு பங்குவை, பூகாரன், ஸ்பீக்கர்காரர், குடிமொவன் எல்லாத்துக்கும் கொடுக்கணும் என்றார். அங்கத்தினர் லிஸ்ட் வாசிக்க வாசிக்க வரிப்பங்க எடுத்து கொடுத்தார் கனகநாதன். மொத்தம் இருபத்தெட்டு வரி பிரியல்ல. எட்டாம் கொடைக்குள் வரி தரவில்லேயேல் வீடு இறங்கி சாமானம் பறக்கிடுவோம், அதட்டினார் பரமசிவம்.
எட்டாம் கொடை, பொங்கல் வச்சி பெட்ரோமக்ஸ் லைட் வெளிச்சத்துல நடந்தது. வரிப்பணம் தராத குண்டல்மணி, வீடுல இருந்து இரண்டு சேவல்கோழி , ஒரு உலக்க, ஒரு அம்மியும், கொளவியும், உரலும் எடுத்துட்டு வந்து கோவிலுக்கு முன்னுக்கு வச்சதும், இதெல்லாம் என்ன அநியாயம் டே! தரக் கழிவில்லாதவனை போட்டு இந்த பாடு படுத்துருயளே? என்றார் முருகப்பெருமாள். கூட்டம் அமைதியானது. குண்டல்மணி தலையை தொங்கப்போட்டுட்டு பாவம்போல நின்னதபாத்து பரிதாபப்பட்டு நாடான்தங்கம் மடியில இருந்த ரூபாய எடுத்து குண்டல்மணிக்க வரிப்பணத்த கொடுத்தார். அம்மங்கொட வரவு செலவு கணக்க வாத்தியார் சுசீந்திரன் வாசிக்க கூட்டம் ஆமோத்தித்தது. திருவிழாகடை தனபாலு கையில ஒருநோட்டை வச்சிகிட்டு திரு திருன்னி முளிச்சான். தனபாலு உனக்கு என்ன என்றார் தலைவர் தங்கமணி. திருவிழா கடையில அம்பிடுபேரும் (அனைவரும்) கடன் வாங்கிட்டு போயிட்டாவ. அத ஒண்ணு ஊருக்காற சொல்லித் தரச்சொல்லுங்க. லே! நாங்க வரிய பிரிச்சி கொடைய நடத்துவமா? உனக்கு பாக்கிய பிரிப்பமா என்று கேள்வி கேட்டார்! சிவபெருமான். வாங்குனவனுவ அந்த பயலுக்க சக்கரத்த விட்டெறிய சொல்லுங்க என்றார் முருகப்பெருமாள். கோயில்ல இருந்ததுல அஞ்சு பேர் பாக்கி எவ்வளவு என்று கேட்டுக்கொடுத்தார்கள். மீதிபாக்கி கேள்விக்குறியானது . பூச முடிஞ்சதும் பொங்கல் வழங்கினாவ. குண்டல்மணி பொங்கல் தின்னுட்டு அம்மிகுழவியை தோளில் வச்சிகிட்டு ரண்டு கோழியையும் எடுத்துட்டு போனார்.
பூசாரி கோயில பூட்டினார். குடிமொவன் பெட்ரோமாக்ஸ் லைட்டை தூக்கி முன்னால் போக, தொடர்ந்து கொடை முடிஞ்ச நிம்மதியில கூட்டம் வீடுகளை நோக்கி நகர்ந்தது. தனபாலு பாக்கி நோட்டோட பாக்கி பிரியுமா? பணயம் வச்ச பொண்டாடிக்க கழுத்து உருப்படி மீழுமா என்ற கேள்வியோட தொடர்ந்தான். அம்மங்கோவில் தூரத்து நிலவொளியின் சிலுசிலுப்பில், ஏற்றி வைத்த கை விளக்குகள் அசைந்தாட பேரமைதியாக இருந்தது.
வைத்தியர் மகன் - வே. ஆறுமுக வேலப்பன்



Awesome story!!
ReplyDeleteVery inspiring story
ReplyDelete