பெரிய முத்தம் (பெரிய முற்றம்)
பெரிய முத்தம்(பெரிய முற்றம்)
ஜனவரி 01 2023
ஆங்கில புத்தாண்டின் தொடக்கம் – கடந்த
நூற்றண்டுகளில்
பெரிய முற்றம், தெற்கு முற்றம்
என புகழ் பூத்த தடங்களின்
வாழ்வியல் விழுமியங்களை – சிறுகதையாக
குமரியின் வட்டார வழக்கியல்
மொழியில் உங்கள் பார்வைக்கு
வைத்தியர் மகன்
வே. ஆறுமுக வேலப்பன்
ஒரு மொடக்கு தண்ணி குடிச்சணும்னா ஒருமைல் தூரத்துல உள்ள நாடாங்கிணறுல தான் போய் எடுக்கணும். எந்த வெறியிலயும் (வறட்சி) தண்ணி வத்தவே வத்தாது. நாடாக்கமாரு தண்ணி கோருயதுக்கு (எடுக்க) வெட்டுனது தான் நாடாங்கிணறு. அங்கயிருந்து மண்ணு குடத்திலோ, செப்புகுடத்திலோ தண்ணி கோரிட்டு வந்துதான் வீட்டுத்தேவைக்கும் நடுவலயளுக்கும் (மரம், செடி) தண்ணி விட்டு வளர்த்தாவ.
குட்டிகண்ணு மூத்தையாவுக்க முஸ்தீபுல (முயற்சி) விறுதாக்குல (வீணாக) இவ்வுளவு இடம் அலைஞ்சி தண்ணி எடுக்க முடியாது. நாமளே சேர்ந்து ஒரு கிணற வெட்டுவோம்ண்ணி முடிவெடுத்தார். பருத்திவிளை கிணறுவெட்டுகாரனை கூட்டி வந்து பெரியாளுவ எல்லாரும் நின்னு தொடங்குனாவ. மூத்தம்மை நான் ஒரு சொப்பனம் கண்டேன். பெரிய மாமரம் ஒண்ணு நிறைய காய்ச்சி பழுத்து தொங்குவு. பறவ, பச்சி எல்லாம் வந்து கொத்தி கொத்தி தின்னுவு. பழம் கொஞ்சம் ருசி கொறவா இருந்தது என்றார்கள்.
கிணறு வெட்டு வேலை மும்முரமா நடந்து முடிஞ்சது. தண்ணி குமுளி ஊத்தெடுத்து குபுகுபுண்ணி பெருவிச்சு. கிணத்துக்கு கல்லுகட்ட சக்கட வண்டியில கொண்டுவந்த கல்லுல ஒரு பெரிய பாட்டுகல்ல, கிணத்துக்குள்ள இறக்கி ஊத்த மட்டுப்படுத்த ஊத்துக்கண்ணுக்க மேல வச்சதா சொல்லுவாவ.
கிணறவெட்டி, சுத்தி கல்லு அடுக்கி, கைப்பிடி சுவர் கட்டி, ஆள் நின்று தண்ணிகோர சுத்தி வட்டமா பாவுகல்லு பாவி, கப்பிமாட்டி தண்ணி இறைக்க, செவ்வக வடிவில் இரண்டுகல்தூண் நாட்டப்பட்டது. நல்லப்பம் (முதலில்) புது தோண்டியில் (தண்ணீர் எடுக்க பனை ஓலையால் செய்யப்பட்டது) கயிறகட்டி மூத்தய்யா கையால தண்ணியகோரி ஊத்துனதும், கைமண்டவச்சி எல்லாரும் வாங்கி ருசி பார்த்தாவ. கங்கை தண்ணி கைக்கு வந்து சேர்ந்தது போல சநதோஷத்தில் நல்ல ருசி என்றாவ. எந்த கோடையிலும் தண்ணி நின்னுகொடுக்கும் வத்தாத கிணறு. ஆனா மூத்தம்ம சொப்பனம் கண்டு சொன்னது போல கொஞ்சம் ருசி கொறவாத்தான இருந்தது.
கிணத்துல தண்ணிகோர ஏகப்பட்ட கட்டுப்பாடு. தண்ணிய கோரி அப்படியே குளிச்சப்பிடாது. ஒரு ஆள் கோரி குடுத்து வாங்கி குளிச்சலாம். கிணத்தங்கரையில வச்சி துணிதுவைக்கப்புடாது. சவுக்காரம் (சோப்பு) போடக்கூடாது. பொம்பளய வீட்டுக்கு ஆகாத நேரத்துல கிணத்துல தண்ணி எடுக்கப்படாது. புறச்சாதி சனங்க தண்ணி கோரப்புடாது. கிணத்துல எப்பப்பார்த்தாலும் ஒண்ணுரண்டு ஆளு வாழி, தோண்டி, தகர டப்பா இதுகள கயித்துலகட்டி தண்ணிகோரிட்டே இருப்பாவ. கோருன தண்ணிய மண்குடம், செப்புக்குடம், லாடம்பான, சருவப்பான இதுகள்ல வீட்டுக்கு கொண்டு போவாவ. சித்திர வைகாசி வெறி (வறட்சி) காலத்துல பெரிய டப்பாவுல வடம் கட்டி, கப்பி வழியா இழுத்து,, கிணத்து பக்கத்துல குண்டுவெட்டி, அந்த குண்டுல ஊத்தி பெருக்கி, காக்கட்டையில தண்ணிகோரி தொலைதூரம் கொண்டுபோய் வாடிப்போன விருச்சங்களுக்கு ஊத்தி, உயிர புடிச்சி போடுவாவ. பெரிய முத்தம் கிணறு நீராதாரமா பயன்படுயத பாத்து வாடிவிளை கிணறு, முருங்கா விளை கிணறு பஞ்சாயத்து கிணறு எல்லாம் தோண்டுனாவ.
கிருட்டினபெருமா (கிருஷ்ண பெருமாள்) தண்ணிய கோரி வெங்கல குடத்த நெறச்சிட்டு தூக்கி தோளுல வைக்கச்சில, கை நழுவி கொடம் கிணத்துக்குள்ள தொப்படீர்… ண்ணி விழுந்திட்டு. சுத்தி நின்னவ்ய ஐயோ கொடம்… கொடம்… ண்ணி போட்ட சத்தத்துல, ஆளு நெறய கூடிட்டு கொடம் முக்கா கொடம் மறிய தண்ணி இருந்ததுனால லேசா அசஞ்சி அசஞ்சி தண்ணி கொஞ்சம் கொஞ்சமா உள்ளபோய் குடம் ஆந்து (மூழ்கி) போச்சி. சுத்திநின்னஆளெல்லாம் ஒரே முடிவா மூத்தய்யா வீட்டுல உள்ள பாதாள கரண்டிய வச்சி எடுக்கலாம் என்று சொல்ல, ஆனா மூத்தய்யா கிட்டுனபெருமாள (கிருஷ்ண பெருமாள்) நம்பி கொடுக்க மாட்டாரு. நாலஞ்சு பேரா போய் மூத்தய்யாகிட்ட சொன்னதும், பத்தயத்துக்கு மேல இருந்த பாதாள கரண்டிய எடுத்துட்டு போய் அவனுக்க கொடத்த எடுத்து குடு என! மகன் தங்கநாடானிடம் சொன்னார். எல்லார் முகத்திலும் சந்தோஷம். தங்கநாடான் அண்ணன் வந்தா கண்டிப்பா எடுத்துப்புடுவாரு. அண்ணன் பாதாள கரண்டியில புது கயிற கட்டி, கிணத்துக்குள்ள தரமட்டம் வர இறக்கி, கொஞ்சம் கொஞ்சமா தூக்கிப் பாத்தா, கைக்கு கனம் கூடுனா ஏதோ சிக்குனது போல இருக்கும். மெதுவா மேல தூக்குனா ஒரு வரியமா (வருஷமா) அத்து விழுந்த பன ஓலை தோண்டி, கமுகம் பாளை தோண்டி, வாழி, டப்பா எல்லாம் மகிழி (தொழி) பிடிச்சி குளுகுளுண்ணி இருந்ததுவள ஒவ்வொண்ணா வெளிய தூக்கி போட்டாரு. ஒருக்கா (ஒரு தடவை) செப்புக்கொடம் பாதிகிணறு வரை வந்து கொக்கியில இருந்து தவறி கீழே விழுந்து ஆந்துபோச்சி(மூழ்கியது). ரண்டுமணி நேரம் போராடி கிட்டினபெருமாளுக்க கொடம் வந்ததும், திரவியம் கெடச்சது போல ஒரே சந்தோசம்தான். எல்லாரும் தங்கநாடான் அண்ணனுக்கு நன்றி சொன்னாவ. கிட்டுனபெருமா பெஞ்சாதி (மனைவி) தங்கபுஸ்பம் கொடத்த பொரட்டி பொரட்டி பாத்துகிட்டு… புது கொடம் சப்பி போச்சி என்று மூஞ்ச (முகத்த) இழுத்ததை பாத்து அனைவர் முகமும் கேள்விகுறியாய் வளைந்தது.
பேச்சிப்பாறை அணை தண்ணி மாவட்டம் முச்சூடும் (முழுவதும்) நரம்புகளப்போல் தண்ணியை எடுத்துப் போய் செம்மண் காடெல்லாம் பொன்விளையும் பூமியா மாத்துச்சி. அணைத்தண்ணி வாறதுக்கு முந்தி பேரளவுக்கு கோனாளிகுளம், நம்பாகுளம், வலியகுளம், நெடுங்குளம், மஞ்சாடிகுளம், கர்ணாகுளம் எல்லாம் வானம் பாத்து மழைத்தண்ணிய பெருக்கி வச்சிருக்கும். இது பக்கத்துல உள்ள பத்துக்காட்டில கட்டப்பட்டு (கஷ்டப்பட்டு) உழுது பயிரேத்துனா, நெல் பயிரு கதகதா வளரும். சீம உரம் கிடையாது. சாணி உரம், கொளமரத்து கொள (தழை) இதுகள போட்டுதான் பயிரேறும். அப்போஉள்ள தட்டாரவிளை, அரிக்கிராவி, வாசறமுண்டான், குதிப்பான்ம், குப்பச்சம்பா, பனங்குறுவா நெல்ரகங்கள் ஒராளம் (ஒரு ஆள் உயரம்) பக்கத்துல வளரும். பொதி வந்து கதிர் காணுய பருவத்துல, எள்ளுபோல (கொஞ்சம்) மழை தூத்தலகண்டா மொத்தபயிரும் அடிச்சி பொரண்டு விழுந்து கிடக்கும். பெரும்பாலும் கதுரு (கதிர்) வந்து பால் அடச்சிய பருவத்துல, குளத்துல தண்ணி வத்திப்போவும். யாலு (திறன்) உள்ளவன், ஆழமா ஊத்துகுண்டு வெட்டி கொஞ்சம் ஊறிய தண்ணிய, காக்கட்டையோ, வட்டியோ (நீர் இறைக்கும் முக்கோண நார் குடுக்கை) வச்சி இறச்சி, பயிர நனச்சி போட்டா பால் அடைக்கும் இல்லண்ணா கருவத்தயா போவும். “உழவன் கணக்கு பாத்தால் உழக்கும் மிஞ்சாது”
ரயில் தண்டவாளத்த தூணா நட்டு ஊருக்குள்ள கரண்ட் கம்பி இழுத்தாவ. சில வீட்டுலதான் கரண்ட் எடுத்திருந்தது. வீடுகள்ல குண்டு பல்புகள் மஞ்சவெளிச்சத்தை கொட்டியது. சுவிட்ச்செல்லாம் கறுப்பு வெள்ளையாகவும் சதுரமாகவும் தனித்தனியா இருந்தது. கரண்டு கம்பத்துல ஒவ்வொரு முச்சந்தியிலயும் நீளபைப்புல கோப்பைய மாட்டி அதுக்குள்ள குண்டுபல்பு மாட்டியிருந்தது. கருக்கல் நேரத்துல தெருவிளக்கு எரியத்தொடங்கும். புன்னை எண்ண விளக்குல பரிமாறுனவ்யளுக்கு குண்டு பல்பு வெளிச்சம் கொண்டாட்டமா இருந்தது.
பெரியமுத்தம் தெருவிளக்குவெளிச்சத்துல, ஊறபோட்ட பனைஓலையில, காக்கட்ட, தோண்டி பிடிக்கியது. கடவம் முடைவதும், சில விடல பயவளும் மூப்லுவளும் சீட்டு களிக்கியதும், நேரப்போக்குக்கு இருந்து கத பேசுயதும். நடராஜன், ரெங்கையா, கோபாலன் மூணுபேரும் உட்காந்து ஒரு நாடகக்கதை எழுதுவதும், மொத்ததுல தெருவிளக்கு வெளிச்சம் சரணாலயமாக விளங்குச்சி. மழைநேரத்துல கரண்டு கம்பத்துல கை வச்சா எறும்பு கடிச்சது போல கரண்டு பிடிக்கும்.
ஊருல உள்ள ஒரே கடை சின்னையா கடைதான். சின்னையா தங்கமான ஆளு. கடையில சின்ன புள்ளய போனா அச்சுவெல்லத்த உடச்சி ஒரு துண்டு கொடுப்பாரு. வீட்டுக்கு தேவையான வெஞ்சண சாமானத்த (மசாலா) அங்க வந்து வாங்குவாவ. சின்னய்யாவுக்க கண் உருட்ட பாத்து பயறுய புள்ளையள, சின்னய்யா ஒரு வெரட்டு வெரட்டுவாரு. பொடியளுவ பறந்திரும். கடைக்கு வெளிய ஒரு உப்புச்சாக்கு எப்பவும் வாய்திறந்து வெள்ள வெளேர்ண்ணி சிரிச்சிகிட்டே இருக்கும். சாக்குக்குள்ள உப்பு அள்ள ஒரு சிரட்டை வானம்பார்த்தே இருக்கும். சின்னையாவுக்கு குழந்தய இல்ல. ஒரு நாள் ஏ! சின்னய்யா மருந்த குடிச்சிட்டாரு…ண்ணி ஒரே தெரச்சலா இருந்து. நாலுகட்டு திண்ணையில மேக்க தலையும் கிழக்க காலுமா படுத்திருந்தார் சின்னையா. வாயில் நுரைநுரைய வெளிய வந்துகிட்டே இருந்து. சுத்தி நின்ன செறுதுவள தள்ளிகிட்டு மூத்தம்ம சின்னையாவுக்க தலையை ரண்டு கையால தூக்கி ஏப்பா! என்னவேலய செய்துட்டாண்ணதும் மயினி… பால்டால குடிச்சிட்டேன்…ண்ணி ஏங்கி ஏங்கி அழுதாரு. கடைவாய் வழியாக கபமும் மருந்துமா வந்துகிட்டே இருந்தது. ஒரேவாடை. தங்கநாடார், ரெத்னம் ரண்டு பேரும் பாத்திரத்துல ஒரு மருந்தகலக்கி (நாய் பீ) பூண்டிருந்த பல்லிடுக்கில் ஒரு ஆப்பகணய சொருவி, அலவ தென்னி உள்ள ஊத்துனாவ. மூணுதடவ குபுக், குபுக் என வாயால எடுத்ததும் சின்னய்யா கண்கள் சொருகிச்சு உயிர் போயிட்டு. விருந்து வீட்டுல நின்ன ஈசாந்தங்கு சித்தி, தகவல் அறிஞ்சி ஒரே ஒப்பாரியோட வந்தாவ. சின்னையா இறந்த வியாழக்கிழமை தோறும் ரொம்ப காலமா! காலமாடன் கோவில் விளையில் உள்ள சமாதிமேல அடிச்சி அழுயத பார்க்க மர்க்கமா (இரக்கமா) இருக்கும்.
பேச்சிப்பாறை அணைத்தண்ணி ஊரெல்லாம் வந்த பொறவு மேடுபள்ளமா இருந்த நிலங்களை மட்டப்படுத்தி, புதுவயல்காடா திருத்தி நெல் விவசாயம் பல்கி பெருகிச்சி. வயலறுப்பு சீசன்ல ஊரு முழுக்க பரபரப்பாத்தான் இருக்கும். வயல்அறுக்க தனித்தனியாக இரண்டு கூறோடி செட் உண்டு. வயல் அறுத்து கதிர்கட்ட தலசுமையால் சுமந்து கொண்டு வந்து வியர்க்க விறுவிறுக்க, சாணாங்கி (சாணம்) யால் மொழுவுன களத்துல போட்டுகிட்டு ரண்டடி தலையடி அடிச்சிட்டு, கதிர்தாள கட்டிவச்சிருக்கும். தலையடி அடிச்ச நெல்லை சுளவுல (முறம்) அள்ளி வீசி எறிஞ்சதும், நாலுபேர் நெல்ல சுத்தி சுத்தி கையில் உள்ள சொளவ, தலைக்கு மேல தூக்கி கீழ்நோக்கி வீசும் போது சாவிநெல்லு, சண்டு எல்லாம் விலகி ஒடும். வீசின நெல்ல கூட்டமா கூட்டி விட்டு, கூறோடி தாறு பாய்ச்சுகிட்டு கிழக்கோமா உட்கார்ந்து, ஒரு நாளி நெல்ல கணபதிமுகமா வச்சிகிட்டு, மரக்கால கொண்டு லாபம், ஒண்ணு, ரெண்டு என ராகமா அளந்து நார் பெட்டியில போட, வாங்கி வாங்கி வீட்டுக்குள்ள கொண்டு தட்டுவாவ. நெல்லு கிட்டதட்ட அளந்து முடியச்சுல கொத்து (கூலி) நெல் அளக்குயேன் என்று, கூறோடி சத்தமா சொல்லிவிட்டு லாபம், ஒன்று, ரண்டு என அளவு தொடரும். குறுக்கும் நெடுக்குமா மூணு வைக்கப்புரியை போட்டு, மேல வைக்கோல தொளிச்சி, அளக்கிற கொத்து நெல்ல அதுக்குமேல தட்டி, சுத்தி வைக்கோல பொதிஞ்சு, பந்துபோல கட்டுன சுருணைய (நெல்கட்டு)… கொண்டு கூறோடி வீட்டுல வைப்பாவ.
சூடடிக்கவும் இரண்டு செட், ஒரு செட்டுக்கு கூறோடி (குழுதலைவர்) பாண்டியன். இன்னொண்ணுக்கு கூறோடி நார்ணவடிவு (நாராயணவடிவு). மதியம் திரும்புனதும் சூடடிக்கான பசு, காள, கண்ணுகுட்டி, கிடாவு, எருமை இதுகளோட வந்து, மாட்டுக்க கழுத்தை பிணையல் கயிறில் கட்டி, அடி தாள வட்டமா உதறி போட்டு அதுக்கு மேல, பிணையல் மாட சுத்தி சுத்தி வர மாடடிக்க சின்ன பயவள விட்டிருக்கும். சூடடிக்கும் போது மாடு சாணி போட்டா இரண்டு உள்ளங்கையில வைக்கலவச்சி சாணிய பிடிச்சி அதற்கான கடவத்தில் கொண்டு போடணும். பிணயல் அடிக்க அந்தந்த வீட்டுல உள்ள பயவ ஆசபட்டு, கூறோடிகிட்ட கேட்டு நாலஞ்சு மடக்கு (சுற்று) அடிக்கியது உண்டு. நல்ல துருசமா (சுறுசுறுப்பா) மாட்ட தட்டி நடத்தணும். இல்லண்ணா உள்ளன் (இடது அற்றத்தில் உள்ளமாடு) நின்ன இடத்திலேயே காலை எடுக்காம சுத்திகிட்டிருந்தா பிரி உருவாகிடும். உடனே பெரியாளுவ உள்ளான் பிரிசுத்துவுலே!…ண்ணி சத்தம் போடுவாவ. உடனே பாத்து பிரிய அறுத்து விடல்லண்ணா உள்ளன் மாடு கீழே விழுந்து செப்பு (கால் தொடை) நவுண்டு போவும்.
சூடடி ஒரு வட்டம் முடிஞ்சதும் கூறோடி கொக்கியஎடுத்து வைக்கத்தாள வெட்டிஇழுத்து வைப்பாரு. மத்தஆளுவ உதறி அடுத்த வட்டத்துக்கு விரிச்சி போட்டு, மாட்ட ஒவ்வொரு பிணயலா இறக்கி விட்டு மாடு புது வட்டத்தில் சுத்தும். சூடடி முடிஞ்சதும் பிணயல் கயிற அவுத்து தோளுல போட்டுகிட்டு மாட்டுக்கான கொத்து நெல்லையும் மாடயும் அந்தந்த வீடுகள்ல கொண்டு விட்ருவானுவ.
வட்டத்த முச்சூடும் உதறி, வைக்கோல காயப் போடுயதுக்கு, அப்பு அப்பா அள்ளிக்கொண்டு போடுவாவ. நெல்ல நார்பெட்டில அள்ளி தலைக்கு மேல தூக்கி வச்சி வீசி பொலி போட போட நாலஞ்சுபேரு சுளவால (முறத்தால்) வீசும் போது சண்டும்சாவியும் தூசும்தும்பும் பறந்து பெரியமுத்தம் தூசுமயமாத்தான் இருக்கும். கூறோடி பொலிய அளந்து கொடுத்துட்டு கொத்து நெல்ல எடுத்துட்டு போவாரு.
பெரிய முத்தத்துல ஒருமாசமா களம் மொழுவுயதும், அறுத்தடுப்பும், சூடடிப்பும், வைக்கல (வைக்கோல்) காயப்போட்டு குத்துபடப்பு, நெடும்படப்பா கூட்டுயதும், நெல்ல காயப் போட்டு பூச்சிகள் அண்டாமல் இருக்க, புங்கு இலைகளையும் கலந்து பத்தயம், மண்பான, குலுக்க (ஆறடி உயரமான மண்பானை), சணல் சாக்குகளில் பத்திரப்படுத்தின பொறவுதான் தூசும் பரபரப்பும் அடங்கும். அறுப்படிக்கு சொளவு, நார்பெட்டி, மரக்கால், நாளி, வைக்கல் கிண்டி காயவைக்க கொக்கி என எது தேவைபட்டாலும் இல்லாதவ்ய! மூத்தம்மகிட்ட கேக்குயதும், வாங்குயதும், கொண்டு கொடுக்குயதுமாத்தான் இருக்கும். மூத்தம்ம ஒரு மனமுசிவில்லாம கொடுப்பாவ.
குளுவச்சனங்க கையில ஒரு குரங்க சங்கிலியில இணச்சி கட்டிகிட்டு யம்மோ, தர்மம் போடுங்கம்மா, கும்புடுராமா, கர்ணம் அடிராமா, ஆடுராமா, பாடுராமா என்று பிச்சை எடுத்துக் கொண்டே போகும்போது, நாய்கள் விடாது துரத்தி, கொலச்சிகிட்டே (குரைத்துக்கொண்டே) போகும். கையில் வைத்திருக்கும் நீளகம்பால நாயை போக்குக்காட்டி அவர்களின் பிச்சைப்பயணம் தொடரும்.
கத்தரி பிறப்பு (கர்த்தர் பிறப்பு) சமயம் ஆலங்கோட்ட தாலியறுத்தான் வேதக்கார ஆம்பிளயும், பொம்பளயும் வெள்ளைவேட்டி சட்ட, வெள்ள சேல, ரவுக்க போட்டுகிட்டு ஒத்த கொட்டு அடிச்சி பாடிகிட்டே வந்து பொதுக்கிணறு கிட்டவந்ததும், மூத்தம்ம வீட்டில இருந்து பானகருப்பட்டியும் தண்ணியும் கொடுப்பாவ. மூணு பெஞ்ச் போட்டிருக்கும் அதுல இருந்து கருப்பட்டிய தின்னு தண்ணி குடிச்சிட்டு போவாவ.
வந்ததும் அல்லேலூயா! ஓ! பாவிகளே மனந்திரும்புங்கள் என்ற பேரொலி! அழைப்புக்கு பிறகு பாடல் தொடர்ந்தது. நுட்பமா இதன்பொருளை கவனித்த வாலிப பயவ… அப்போ நாங்க… பாவிகள்… நீங்க யோக்கியன்மாரு… நாங்க மனம் திரும்பி உங்க பின்னால வரணும். ஒழுங்கா பாட்ட பாடிட்டு போனா போவணும் இந்த பாவிகளே, ஈவிகளேண்ணி கத்தினா இந்த தெசவளிக்கு (பக்கத்தில்) தலைகாட்டப்புடாது என்று சொல்லியனுப்பியதும் அந்த தடவையோட அந்த பஜனை நின்னுபோச்சி.
ஊரெல்லாம் கரண்ட் வந்ததும் ஆலங்கோட்டையில ஒரு ரைஸ்மில் வந்தது. நெல்ல அவிச்சி ரைஸ்மில்லுக்கு கொண்டுபோனா, அங்க ரைஸ்மில் குறுப்பு ஆப்ரேட்டர். வீடுவீடா வந்து கூப்பிட்டாலும், ரைஸ்மில்லுல நெல்லு குத்துனா, அரிசியில கரண்ட்பிடிச்சிருக்கும், உடம்புக்கு ஆவாது… ண்ணி ஒருசனமும் போவாது. மூத்தய்யா! அது என்னதான் ஆவுவுல? பாப்போம்…ண்ணி ரண்டு நார்பெட்டி நெல்ல தாய்… க்க தலையிலயும், அப்பு கூட்டன் தலையிலயும் ஏத்தி, ரைஸ்மில்லுக்கு கொண்டுபோய் குத்திகிட்டு, தவிடு தனி அரிசி தனியா கொண்டு வந்தாவ. மூத்தம்மகிட்ட யாரோ இளக்கிப்புட்டாவ. அரிசிய பாயில தட்டி காத்தோட்டமா விரிச்சி போட்டாதான் கரண்ட் பிடிச்சது போகும்… ண்ணி! மூத்தம்ம நாலுகட்டு தொட்டி முத்தத்துல ஓலப்பாய விரிச்சி அரிசிய தட்டி காயப் போட்டிருந்தத அதிசயமா வந்து எட்டிப்பார்த்துட்டுப் போனாவ.
ஊர்பூரா நெல்லு கைகுத்தல்தான் கல் உரல், தகர ஓடு (குடுவை அமைப்பில்) இதுக்குள்ள அவித்து காய்ந்த நெல்லை தட்டி, சுத்திநின்று பூணுகட்டிய உலக்கையை வச்சி இடக்கையும் வலக்கையும் மாத்தி மாத்தி போட்டு குத்தி சுளவு (முறம்) வச்சி பொடச்சி செத்த நேரத்துல நெல் குத்து முடிஞ்சி போவும். ரைஸ்மில்லுல குத்துன அரிசி உமியும் தோலும் நீங்கி வெளுத்து போயிருக்கும் இன்னைக்கும் கைக்குத்தல் அரிசிக்கு தனிமவுசுதான்.
தோளுல பெரிய காவடி! அது ஒரு மாதிரி நூத்துக்கணக்குல சின்ன சின்ன சுரக்குடுக்கைய கட்டி தொங்க விட்டிருக்கும், சுமக்க முடியாம குட்டயான ரூபத்துல சட்டை போடாம பச்சவேட்டி உடம்பெல்லம் விபூதி நெத்தியில் கந்தசாமி சாணான் சாமி என எழுதியிருப்பார். தென்காசி பக்கத்துல இருந்து வந்து வெள்ளமேடிவிளையில் தங்கி ஊர் ஊரா இந்த காவடியை சுமந்து போவாரு. பெரிய எதிர்பார்ப்பு கிடையாது குடுக்குயத வாங்கிகிடுவாரு. சின்ன புள்ளய அவரு புறத்தால சாணான்சாமி, சாணான்சாமி என சத்தம்போட்டுட்டேபோவும்.
அறுப்பு அடிப்பு நேரத்துல வீட்டுக்கோழிகளுக்கு கொண்டாட்டம் தான். வைக்கோல கிண்டி நல்லா பச்சநெல்ல தின்னுட்டு முட்டயா போட்டுத்தள்ளும். கறுப்பு நிறத்தில வாழப்பூ கொண்ட போட்டுகிட்டு வெள்ளசேல வெள்ளஜெம்பர் போட்டுகிட்டு இடுப்புல ஒருநார்பெட்டி. நார்பெட்டிக்குள்ள வைக்கோல வச்சி, வீடுவீடா கோழிமுட்ட வாங்குய கொடுப்பக்குழி பாட்டியும், தலையில பெரிய நார்ப்பெட்டியும் கையில ஒரு இரும்பு வளையமும் அதனுள் சிறிய வளையமும் நான்கும் பெரிய வளையத்தை இழுத்து அசைக்கும் போது எழுப்பும் கலகல ஒலியும், அதனுள் பொரி பொரி என்ற உடைந்தோடும் சத்தமும் இரண்டு படி நெல்லுக்கு ஒரு படி பொரி நெல்பொரியில் கருப்பட்டி பாவு ஊத்தி கிண்டியிருக்கும் சின்ன பிள்ளைகளுக்கு அது ஒரு தீனிப்பண்டம்.
கையில திருவோடு, ஒரு முளம் நீளத்துக்கு ஒரு வேல். இடுப்புல காவி வேட்டி தலையில் ஜடாமுடி கொண்டை. தீச்சண்யமான பார்வை நெற்றியில் விபூதிபட்டை கழுத்தில் பெரிய பெரிய உத்ராட்சமாலை, உடல் முழுக்க பிச்சிப்பூ மொட்டுகளை சொருகி வைத்தது போல மேல் தோல் முழுக்க சிறிய வேல்களை நெருக்கமாக குத்தியிருப்பார். வீடு வீடாக வந்து முருகன் சாமியாருக்கு காணிக்கையென்றதும் நெல்லோ, அரிசியோ கொண்டு கொடுப்பார்கள். ஆண்டு பூரா மொகத்துமுடி, தலைமுடி வெட்டுய குடிமொவனுக்கும், அழுக்குத்துணி வெழுக்குய வண்ணாருக்கும் பூதோறும் (6 மாதத்திற்கொருமுறை) மரக்கால் கணக்கில் நெல்தான் கூலி.
ரண்டு மூணு வருஷமா மழை ஏ மாத்திப்புட்டு, தொடர்ந்து வயலு கருவத்தையாயிட்டு. கோட்டாத்துலயிருந்து மூட மூடயா அரிசியை லோடு சைக்கிள்லகட்டி காட்டுவழிப்பாதையா கேரளாவுக்கு கடத்தி சம்பாதிச்சானுவ. உள்ளூருல ரைஸ்மில்ல நெல்லுகுத்திட்டு போனாலே ரசீது இல்லைன்னா போலீஸ்காரன்மாரு புடிச்சிபறிச்சி கொண்டு போற அநியாயம் நடந்துட்டு இருந்து.
அறுப்படிப்பு முடிஞ்சாச்சுன்ன விளையாட்டு புள்ளயளுக்கு ஆடுகளம் தான் பெரியமுத்தம். சாயந்தரம் மஞ்சவெயிலுல பல நிறத்துல புட்டான் (தட்டா) தலை தட்டுய உயரத்துல கூட்டம் கூட்டமா பறக்கும். சின்னப்பயலுவ கூந்தல் வண்டி, பட்டம் விடுவது, கள்ளன், போலீஸ் விளையாட்டு, பெண்பிள்ளைகள் தட்டுபோட்டு விளையாட்டு, சிங்காம்புள், கம்பெறிஞ்சான், பாட்டம் வச்சி விளையாடுவது என தெரச்சி கட்டிருவாவ. இருட்டி வெளக்கு வச்சபொறவுதான் மூத்தம்ம சத்தம் போட்டாதான், வீட்ட பாக்க போகும்.
ஒடுக்கத்து (கடைசி) வெள்ளிக்கிழமைக்கு முந்தின நாள் வியாழக்கிழமை சாயந்தரம் ஆறு மணிக்கு அஞ்சோ ஆறோ வாடகை சைக்கிள் நாள் வாடகைக்கு எடுத்து வந்திருக்கும். ரா முழுக்க பயவ சைக்கிள் ஓட்டிப் பழவுவானுவ. சின்னப்பயவதான் ஓட்டிப் பழகுயான்…ண்ணி பாத்தா பெரியகுட்டியும், பழய நாராயண்ணும், பொண்ணுகட்டி புள்ளையளுக்கு கலியாணம் பண்ணிய பிராயத்துல இல்ல ஆசை கிளம்பியிருக்கு. ராத்திரி ஒருமணி வர சைக்கிள் ஓட்டிப் பழகுயது முடிஞ்சி, காலையில மூணரை மணிக்கு சைக்கிள் எல்லாம் வரிசையா குமார கோவிலுக்கு போவும். சூரப்பள்ளம், காரங்காடு, நுள்ளிவிளை, மணக்காவிளை, குதிரைபந்தி விளை, வில்லுகுறி தொட்டிப்பாலம் போய், புலியூர்குறிச்சி தாண்டி பொழுது உதிக்கச்சில குமாரகோவிலில் (வேளிமலை) சைக்கிள பூட்டி வச்சிகிட்டு, கோவில் குளத்துல குளமா அது? கடல் போல இல்ல அலை அடிச்சிட்டு கிடக்கு. நல்ல அலற நீச்சல் அடிச்சி குளிச்சிட்டு, ஒவ்வொரு படியா ஏறி மலை மேல் இருக்கும் முருகப்பெருமானை பயபக்தியோட கும்பிட்டுவிட்டு, மலையடிவார காப்பிகடையில தோசையும், காப்பியும் குடிச்சிட்டு ஒரே சவுட்டு. ஒம்பது மணிக்கு பெரியமுத்தம். சைக்கிளையும் வாடகையும், சைக்கிள் பழகுய பயவ கிட்ட கொடுத்துட்டு அண்ணன்மாரு பள்ளிக் கொடத்துக்கு போவானுவ. சின்னப்பயவ வெயில்…ண்ணியும் பாக்காம பகல் முழுக்க சமுட்டிகிட்டு சாயந்தரம் அஞ்சு மணிக்கு சைக்கிள் கடையில கொண்டு கொடுப்பானுவ.
சாயந்தரம் அஞ்சர மணிக்கு பெரியமுத்தம் தெருவிளக்கு கம்பத்து மூட்டுல கறுப்பா கயிலிகட்டுன ஒரு வெளியூர் காற மனுஷன் தூத்து சுத்தப்படுத்திகிட்டு இருந்தார். மூத்தையா வீட்டுக்கு போறதும் வாறதுமா இருந்தாரு. பாரக்கோல் மாதிரி ஒரு கம்பியநட்டு அதுக்கு மேலா மூணு காடா திரி எரிய்யது மாதிரி ஒரு விளக்க பொருத்தி தரையில ஒரு விரிப்புத்துணிய விரிச்சி, மூத்தய்யா வீட்டு திண்ணையில இருந்து இரண்டுகட்டு துணிய எடுத்துக் கொண்டு வச்சி, விரிதுணியில காச்சிப்படுத்தி வச்சாரு. இப்போ நல்லா இருட்ட ஆரம்பிச்சதும் தெருவிளக்கு எரிஞ்சி. அதோட மண்ணெண்ண காடாவிளக்கையும் கொழுத்தினாரு. விளக்கு பிரகாசமா எரிஞ்சிது. திடீர்ன்னு அடிக்குடலுல இருந்து குரலெடுத்து லேலோம் சார் லேலோம்! லேலோம் சார்! லேலோம் என்று திரும்ப திரும்ப கத்தினார். எரிவிளக்கை தேடிவரும் விட்டில் பூச்சி போல, திரி விளக்கைத்தேடி ஒவ்வொருத்தரா வரத் தொடங்கினாவ. ஒரு பெரிய முரட்டு பெட்ஷீட்டை அடித்து உதறி, அழகான சோலாப்பூர் பெட்ஷீட்சார். கிழியவே கிழியாது ரண்டு ரூபா! ரண்டேரூபா… குரல் கரகரப்பா கம்பீரமா இருந்தது. லேலம் பதினெட்டு ரூபாயில் நின்றது. லேலம் கேட்ட தனசிகாமணி ரூபாய் கொடுத்து பெட்ஷீட்டை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து லுங்கி, டவ்வல், வேட்டி, சேலை என காடாவிளக்கு கரும்புகையை கக்க கக்க துணிகளை லேலம் போட்டு விற்றுக்கொண்டிருந்தார். இடையிடையே லேலோம் சார் லேலோம் என்ற ஒலி உச்சஸ்தானியில் வெளிப்பட்டது. லேலக்காரன் எதிர்பார்த்ததை விட ஒருமடங்கு கூடுதலா வித்து தீர்ந்தது. எல்லாம் சுருட்டி கட்டி, காடாவிளக்க அணைச்சுகிட்டு, மூத்தய்யா வீட்டு திண்ணையில உறங்கிகிட்டு பொழுது விடிஞ்சதும் அடுத்த ஊருக்கு கிளம்பினார் லேலக்காரன்.
அறுப்படிப்பு முடிஞ்சி செத்த ஆத்தலா இருக்குய நேரத்துல, கிராம தலையாரி, வெட்டியான் கர்ணன் சேசவபிள்ள, சுப்பையன்பிள்ள, ராமன்பிள்ள மூணு பேரும் திருமாலு, முத்துபேச்சி, சுடலை…ண்ணி மூணு கையாளுவளோட, வீடு வீடா வந்து ரெஜிஸ்டர்ல உள்ள, நிலவிஸ்தீர்ணப்படி இரண்டு. நாலு, எட்டு, பத்து மூட்டவரை லெவி நெல்லு என அரசாங்கத்துக்கு கைப்பற்றினாவ.
அப்பாவி விவசாயிய கண்ணுகுட்டிய பறிகொடுத்த தாய்ப்பசு போல மலங்க மலங்க முளிச்சிகிட்டே நின்னாவ. அதிகார தோரணையில நெல்லு இல்லைண்ணி சொன்னா வீடு இறங்கி பாத்து, சாக்குல, பானைல, குலுக்கையில சாப்பாட்டுக்கு வச்சிருக்க நெல்லை எடுத்துப்புடுவானுவ.
பலயமுத்து (பலவேஷமுத்து) வீட்டுல இவ்விய (இவர்கள்) பாச்சா (முயற்சி) வேவ இல்ல (பலிக்கவில்லை) பதினெட்டு மரக்கா நெல்லு வருவு வோய்! என்றதும், ஒரு நெல்லுமில்லை இல்லை. எல்லாம் குடுத்து கடன அடச்சிபுட்டேன் என்று சொல்லி முடிக்கியதுக்குள்ள கையாள் முத்து பேச்சியும் திருமாலும் வீட்டுக்குள்ள பாய்ஞ்சி போய் தேடிட்டு ஒண்ணுமில்லண்ணி வந்தானுவ.
தலையாரி சுப்பையன் பிள்ளையும் ராமன் பிள்ளையும் வீட்ட சுத்தி சுத்தி வந்தாவ சுவருல சாத்தி வச்சிருந்த புளி அருவா கொக்கி கம்ப எடுத்து பக்கத்துல இருந்த உரக்குண்டுல கையாளு சுடலைகிட்ட குத்திப்பாக்க சொன்னாரு சுப்பையன் பிள்ள. நெல்லு இங்க இருக்கு யாமான…ண்ணி சத்தம் போட்டான் சுடலை. பலயமுத்து மம்பட்டிய எடுத்துட்டு வந்து உரத்த தோண்டி மாத்துண்ணார் கேசவபிள்ள. உள்ள பாத்தா நாலு சாக்கு நெல்லு சுப்பையன்பிள்ள லே! ஒழுங்க தந்தா பதினஞ்சி மரக்காலில் தீரும். ஒளிச்சா வைக்கா! ஒளிச்சி… திருமால் ரண்டு சாக்க எடுத்து மாத்துண்ணார் ராமன்பிள்ள. பலயமுத்து தலை வாழப் பூவாட்டம் தொங்கிட்டு. விரோதிக்கு பயந்து காக்கா, முட்டய பாம்பு பொந்துல கொண்டு விட்டுட்டு வந்தது மாதிரியாயிட்டு.
இரண்டு மூணு பூவா (போகமா) தொடர்ந்து மழை கொறவுனால தொடர்ந்து பேச்சிப்பறை தண்ணி வத்திப்போச்சி. பயிர் கதிரும் பொதியுமா பட்டு கருவத்தயாகி போச்சி. வயல் கிருஷியில புணியமில்ல (லாபமில்லை). சனங்க தென்னம்பிள்ளய ஊன ஆரம்பிச்சாவ. வயல்காடு தோப்புக்காடாச்சு. அங்கங்கே குழாய்கிண்று உருவாச்சி. பேச்சிப்பாறை தண்ணிய சுமந்து வந்த கால்வாய்கள் பராமரிப்பில்லாம நெரந்து போய் கிடக்கு. போர்கிணறு நாளுக்கு நாள் பாதாளம் நோக்கி தாந்து போவு. பேச்சிப்பாறை தண்ணி வரையில்லண்ணா இந்த மாவட்டம் சுடுகாடுதான். வீட்டுக்கு வீடு போர் கிணறு. ரூமுக்கு ரூம் பைப். திருக்குனா தண்ணி பெரியமுத்தம் பொதுக்கிணறுல ஒரு சொட்டு தண்ணியில்ல தண்ணி மட்டம் நாளுக்கு நாள் கீழ் நோக்கி போவு. பெரு வெறியில் (கோடை வறட்சி) கூட வத்தாத கிணறு, கப்பிகளின் ஒலியும், தோண்டி, வாழியின் உரசல் ஒலியும் இல்லாம, கப்பி கம்ப தாங்கும் தூண் ஒண்ணும் உடஞ்சி போச்சு. ஒத்த தூணோடு கிணத்துக்குள்ள சின்னபுள்ளய விளையாட்டு சாமானங்களும், டாஸ்மாக் பாட்டில்களும் பாதாழ கறண்டியின் வருகைய நோக்கி தவம் கிடக்கு.
“கிணறு பாழாகும் கீழ் ஊற்று பொய்யாகும்” – ஐயா வைகுண்டரின் சொல்லுக்கு சாட்சியா விளங்குது பொதுக்கிணறு. பாழ்கிணத்துல ஆள் விழுந்திராம இருக்க அரசாங்கம் இரும்பு மூடிபோட்டு கிணத்த மூடியாச்சு. தட்டாரவிளை, அரிக்கிராவ போன்ற உயரமான நெல் இனம் அழிஞ்சி குறைவான நாளுல விளைய்ய குட்டைப்பயிர் வந்து. இப்போ விளங்காடு ஆன பொறவு அதுவுமில்ல. வயிலே இல்லண்ணா அறுப்படிப்பு, சூடடி, மாடுகள், வைக்கோல்படப்பு காணாப்பொருளாச்சு. நாமக்கல் முட்டை வீதியெல்லாம் வரும் போது முட்டபாட்டிக்கு விலைக்குவாங்க வீட்டு முட்டை கிடைக்கவா செய்யும். ரயில்தண்டவாளக் கறண்டுகம்பிதூண மாற்றி சிமெண்ட் தூணா நட்டாச்சு. குண்டுபல்பு தடை செய்யப்பட்டு விதவிதமா பிராகாச விளக்குகளின் வர்ணஜாலம். பாக்கெட் பால் ருசியாபோச்சி. மாட்டுத்தொழுவு மறைஞ்சேபோச்சு. நெல் அவிக்க, புளியமுத்து அவிக்க, சோறு ஆக்க, பயினி காய்ச்ச நாக்காளி அடுப்பு தொலைஞ்சி, சிலிண்டர் கேசும், நாலுபர்ணர் புகையில்லா அடுப்பும் பரிச்சய மாச்சு. ரைஸ்மில்லு சுவடே தெரியாம மாவுதிரிக்கும் மில்லா மாறிபோச்சு, நெல் அவிப்பு, காய போடுவது, நெல்லுகுத்தி, புடைக்கியது கேலியாகிப் போச்சு, நியாயவிலைக் கடையில் விலையில்லாஅரிசி, சூப்பர் மார்கெட்டில் ஆடையும் தவிடும் இழந்த சில்வர் பிரைட் அரிசி, உலக்கை, உரலு, உரப்பெட்டி, திரியலு எல்லாம் ஆக்கர் யாவாரி கொண்டுபோய் தலைமுறைகளாச்சி. உழைச்சவன் உதிரத்தை குடிப்பது மாதிரி லெவி நெல் அளக்க பிள்ளைவாள்கள் வரவேண்டிய அவசியம் இல்ல. பள்ளிப் புள்ளையளுவ பள்ளிக்கும், வீட்டுக்கும், டியூசனுக்கும், அலைஞ்சி அலைஞ்சி, மிச்ச சொச்ச நேரத்துல மொபைல் போனில் முகம்பதைத்து தொலைந்தே போனார்கள். பெரியமுத்தத்துல சின்னபுள்ளயளுக்க ஆட்டம், பாட்டம் அனக்கமே இல்ல. ஆணும், பெண்ணும் இருசக்கர வாகனத்தை தனதாக்கி பறந்து கொண்டிருக்கும்போது, சைக்கிள்சவுட்டி பழக வேண்டியது அவசியமா? வாடகை சைக்கிள் கடைகள் மரித்தே போனது. லேலகாரன இந்த திசவழிக்கே காணல்ல…
பெரிய முத்தம் பேரு மட்டும் நின்று நிலைக்கிறது. ஆரவாரங்கள் இல்லாமல், தென்னைமரச் சோலையில், அமைதியான சூழலில்…
வைத்தியர் மகன்
வே. ஆறுமுகவேலப்பன்


Comments
Post a Comment