நீக்கம்புதீனம் (காலராநோய்)

நீக்கம்புதீனம் (காலராநோய்)

 

கொத்து கொத்தாக உயிரை களவாடிய உயிர்க்கொல்லி நோயாகிய நீக்கம்புதீனம் (காலரா) நோய் தாக்கத்தின் போது நடந்த நிகழ்வை சிறுகதையாக குமரி மாவட்ட வழக்கியல் மொழியில் உங்களின் பார்வைக்கு தருவதில் அகமகிழ்கிறேன்.





மின்விளக்கும், தார்ரோடும் எட்டிப்பார்க்காத அந்த காலம். ஓலைக் குடிசைகளும், பச்சை செங்கலால் கட்டப்பட்ட ஓட்டு வீடுகளும் தெரு பாய்ச்சலாக இல்லாமல் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருநூறு வீடுகளை கொண்ட அந்த புதூர் ஊர். இரவு நேரங்களிலும் வீடுகளின் வெளியே, கட்டில், ஓலைப்பாய் விரித்து அமர்ந்து கலகல என இருக்கும் அந்த கிராமம். கார்த்திகை மாதம் வந்த உடனே, கருக்கல் நேரத்தில் பெரும் அமைதிக்காடாகி விடும். சுவர்களின் மாடக் குளிகளிலிருந்து புன்னைக்காய் எண்ணெயில் எரியும் விளக்குகள் மரப்பொந்துகளிலிருந்து வெளியே எட்டிப் பார்க்கும் ஆந்தையின் கண்களைப் போல் அசைந்து அசைந்து ஆடியது.


வழக்கமா கைவிளக்கு ஒளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் மாடக்கண்ணு பாட்டா, குட்டிக்கண்ணு பாட்டா உட்பட ஐந்து பேரும் வீட்டுக்குள்ளே உறைந்து போனார்கள். கார்த்திகை மாதம் கிராமக் கோவில்களில் கருக்கல் நேரத்தில் தினசரி விளக்குகள் ஏற்றப் பட்டிருக்கும். இளம் பனியும், மழையின் தூறலும் தொற்றிக் கொண்டு இரவின் நுழைவு காலத்தில் மனித சஞ்சாரமற்று மயான அமையுடன் விளங்கியது. வழக்கமா கார்த்தியலுக்கு (கார்த்திகை தீபம்) திரளி இலை கொழுக்கட்டை, பனை ஓலை கொழுக்கட்டை, முந்திரி கொத்து, பலகாரம், சுத்து முறுக்கு, அச்சு முறுக்கு என பெண்களுக்கு வேலை தலைக்கு மேல இருக்கும்.

       

       ஆனா இந்த வருஷம் பாழாப்போன நீக்கம்புதீனம் அடுத்த ஊர்களில், புறாவுக்கு வலை விரிச்ச வேடன் மொத்தமா அள்ளிப்போவது போல் மொத்த மானுட உயிரையும் காவு வாங்குயத கேள்விப்பட்டு ரொம்ப எச்சரிக்கையாயிருந்தனர். நாலு வரியத்துக்கு முன்னால வந்த நீக்கம்புல தவப்பன் மக்க எல்லாரும் சேர்ந்து போன குடும்பம் நிறைய உண்டு. மாரிகிடா மாதிரி நெஞ்ச மலத்திகிட்டு திரிஞ்ச விடல பயவளையும் விட்டு வைக்கல.

      

        ஊருக்குள்ள ஒரு அன்னியன் நுழைஞ்சாலே ஒட்டு மொத்த ஜனங்களும் விழித்துக் கொள்வதோடு ஒன்று கூடிவிடும். ஆனால், தற்போது நேரம் இருட்டுயதுக்குள்ள ஒவ்வொரு வீட்டு பாட்டனும் பாட்டியும் வம்சம் காக்க ஒருத்தரையும் வெளியே விடுவதில்லை.


எந்த நேரத்திலும் மன தைரியத்தோட பனை ஏறும் பனைஏறிகள் முருக்குத்தடியை தோழில் சுமந்தவாறு இடுப்பில் அருவா பெட்டியும் காலில் பனம்பத்தை செருப்பும் டக் டக் என ஓசையை எழுப்ப, அந்திப்பனை ஏறிவிட்டு இடுவை வழியாக வரும் அனக்கம் கேட்டு, கார்த்திகைமாதம் தறிகெட்டு அலையும் நாய் கூட்டம் குரைக்கும் குரைப்புச் சத்தம் அமைதியை குலைத்து ஆர்ப்பாட்டம் செய்யும்.


அமைதியையும் இருளையும் கிழித்துக் கொண்டு முட்டத்து லைட் ஹவுஸ் வெளிச்சம் சுற்றி சுழன்றடிக்கும். ரா முழுக்க கடலடி சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். எழுகின்ற அலை விழுகின்ற சத்தம் நாலு கிலோமீட்டருக்கு இப்பால் உள்ள இந்த கிராமத்திற்கும் பக்கத்தில் உள்ளது போல் கேட்கும். கடற்கரையில் மீம்பாடு அதிகமானதுனால காயப்போட வெயிலுமில்லாம தலைச்சுமட்டுல எம்புட்டு மீனதான் மாத்த முடியும். வெளியூர் கொண்டு செல்ல வாகன வசதியும் இல்லாம பாதுகாக்க வழியும் தெரியாமல் இறந்த மீன்கள் இறைந்து காணப்படுவதால், அவற்றிலிருந்து வெளியாகும் அழுகிய துர்வாசனையை கடற்காற்று கடலோர கிராமங்களுக்கு இலவசமாக கொண்டு சேர்க்கும். இதுவும் கொள்ளை நோயின் பரவலுக்கு உரம் சேர்க்கும்.


சத்தியலிங்கத்தின் மூத்த மொவன் ஆளும் பிராயமுமா இருபத்திரண்டு வயசு பய நாலஞ்சி நேரம் வாயால வவுத்தால எடுத்ததும், சத்தியலிங்கம் வைத்தியர் வீட்டு கதவ தட்டி மருந்துப் பொடியும், குடிக்க எண்ணெயும் வாங்கிட்டு போறதுக்குள்ள பய போய் சேர்ந்துட்டான்.

      

        சாதா நேரம்ன்னா ஊருல ஒரு துட்டி விழுந்தா அத்தனை மனுஷங்களும் அடக்கம் முடியதுவர அன்ன ஆகாரம் குடிக்காம எல்லாரும் கலந்துகிடுயது வழக்கம். ஆனா நீக்கம்பு தீனத்துல போயிட்டா ஒருத்தரையும் வீட்ட விட்டு வெளிவர பெத்தவங்க சம்மதிக்க மாட்டாவ.

            

       குடிமொவன் முத்துமணியும், அஞ்சே அஞ்சு ஆம்பளய நாடான் கண்ணு, குபேரநாடான், சுப்பையா, கண்ணுசாமி, தவசிக்கண்ணு பொண்டாட்டியள போ மயிரண்ணி சொல்லிகிட்டு செத்த மையத்தை வெட்டி புதைக்க கிளம்பிட்டாவ. திக்கிலான்விளை, ராக்குவன்தட்டு, கருக்காவிளை, காலமாடன்விளை, விளைகளில் பனை ஏறும் தைரியமான வீரமுத்து, சுடலைமணி, வலியசாமி, வெட்டிப்பிச்சான் எல்லோரும் கள்ளு கலயங்களை இறக்கி ஒரு மொறட்டு பானையில உறபோட்டு எப்போது வேணும்னாலும் செம்புல கோரி குடிக்கும்படி ஏற்பாடு செய்தனர். உற பானை குழிதோண்டி மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும். நுரை பொங்கி விலாமடியை தள்ளிக்கொண்டு எட்டிப்பார்க்கும்.

      

      இஷ்டம்போல குடித்து முக்கா போதையில் முத்தாரம்மன் கோவில் முச்சந்தியில் கூடியிருந்தனர். சத்திலிங்கத்து வீட்டில் குடிமொவன் போய் யம்மோ ஐயாவ எங்க அடக்கணும் என்று கேட்க விசும்பிய அழுகையோடு கம்பி ஜன்னலுக்கும் அந்த பக்கம் செல்லம்மை நின்னுகிட்டு நாடாங்கிணத்து விளையில என்று பதில் சொன்னதும், தாமதிக்காமல் குடிமொவன் ஐவரிடம் வந்து சொன்னதும், மம்பட்டி பிக்காசியோடு புறப்பட்டு நாடாங்கிணத்து தட்டில் கன்னிமூலையில் ஆறடிக்கு நாலடி குண்டு ரெடி. ஏய் போதும் போதும். மூத்துச் செத்தவதுக்கு ஆறடி குண்டு. இடையில போறவனுக்கு நாலடி போதாதா என்று நாடான்கண்ணு அதட்டினார். அதுக்குள்ள கண்ணுசாமி ஒரு கொல இளநிய வெட்டி வந்து ஆளுக்கு ரண்டு இளநியை சீவி கொடுக்க அனைவரும் மொடக் மொடக் என குடித்து முடித்தனர்.

      

        குடிமொவனோடு அந்த ஆறு பேரும் கதவை தட்டியதும் சத்தியலிங்கம் கதவ திறக்க வீட்டிலுள்ள ஆணும், பெண்ணும் ஓடி ஒளிய குபேரநாடார் உறக்கப்பாய் ஒண்ண எடுத்து குடிமொவனுகிட்ட கொடுக்க, தூக்க முடியாம நாலுபேரும் சேர்ந்து உருட்டி பாயில கிடத்தி, அங்கின கிடந்த சேலையை இரண்டா வெட்டி பாயோட சேர்த்து கட்டி மேல் முடிச்சு போட்டுவிட்டு, மூலையில சார்த்தி வச்சிருந்த குப்பிபூண் உலக்கை இரண்டையும் இருமுடிச்சி வழியா சொருகி நாலுபேரா சேர்ந்து உலக்கையை பிடிச்சி தோளுல வச்சி தூக்கி போனார்கள். நடமாத்துமில்ல, பட்டம் கட்டு, வாய்க்கரிசி, மாலை மரியாதை, கொள்ளி வைப்பு ஒரு எளவும் இல்லை. புதைச்சி முடிச்சிட்டு கருவாட கடிச்சு உறபானையில இருந்து கள்ள கோரி குடிக்கும்போது வடக்கு பக்கம் ஒப்பாரி கேட்டது. இவர்களை பொறுத்தவரை அழுகையோ ஒப்பாரியோ கேட்டா அதுதான் அழைப்பு மணி. அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாவார்கள். ஓரே வீட்டில் ஏழுபேரை சுமந்து சென்று ஒரே குழியில் அடக்கிய அனுபவமும் உண்டு. இவர்கள் மட்டும் இல்லைண்ணா ஊரே நாறிப் போகும். கிட்டத்தட்ட பனிரெண்டு நாளையில் நாற்பத்தெட்டு சடலத்தை புதைச்சி முடியும் போது…….

      

          குமாரசாமி வீட்டுல அழுகை சத்தம் வழிந்தோடியது. குடிமவனும் மற்றையோரும் கதவதட்டி உள்ள போய் பார்த்தா குமாரசாமிக்க மூத்த மொவா சின்னக்கிளி போதமில்லாம கிடந்தா. தவசிக்கண்ணு கை நாடிய புடிச்சி பாத்துட்டு, நாடி அடங்கலியே என்றதும் தாயார் பூவம்மை ஏய்யா வாயால வயத்ததால போயி அங்கயும் இங்கயும் அலஞ்சிட்டிருந்தவ தவிச்சவாய்க்கு மாடக்குளியில இருந்த ஒரு குப்பி மண்ணெண்ணய ஒரே மூச்சுல குடிச்சிட்டா. சரி கொஞ்சம் பொறுத்து பாப்போம் என அனைவரும் கிளம்பினர்.

     
             சித்திரை பத்துக்கு குமாரசாமி மக சின்னக்கிளிக்கு கல்யாணம். உரே பந்த காவணத்தில் கூடியது. ஊர் மக்க எல்லாரும் சின்னக்கிளி மண்ணெண்ணெய் குடிச்சி பிழைச்சத கதை கதையா பேசிக்கிட்டிருந்தாவ……                                                                                                                              
                                                                                                       வைத்தியர் மகன் 
                                                                                         வே. ஆறுமுகவேலப்பன் 

                                                                                                                                  

Comments

  1. Pazhaya pechu vazhakai neyabaga paduthiyatharku nandri. Arumaiyaana kadhai

    ReplyDelete
  2. வட்டார வழக்கு மொழி யில் கதை செல்ல... பழங்காலத்துக்கு சென்று வந்தோம். வெகு அருமை.
    காலரா நோய் காலத்தில் நாங்கள் இல்லை.ஆனாலும் நோய் பட்ட காலத்தின் நிலைமை அறிந்தோம்.இன்னும் தொடரட்டும் தங்கள் பணி... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மிக்க நன்றி

      Delete
  3. அருமையான கதை பதிவு. அந்த காலத்தில் பேசப்பட்ட வட்டார வழக்கு மொழியில் கதையை கொண்டுசென்றது அருமை. தொடரட்டும் இலக்கிய பணி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றி

      Delete
  4. மாடக்குளியில் விளக்கு மாட்டும் முறை மீண்டும் வந்தால் மிக நன்றாக இருக்கும் பழைய காலத்தில் நடந்தது இது
    கதையல்ல நிஜம் வரவேற்கிறேன் மீண்டும் எதிர்பார்கிறேன் வாழ்க
    வழர்க தங்கள் பணி வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்கு நன்றி

      Delete
  5. Arumaiyaana kadhai!! Iam soper proud that i could to be small part in putting this out. Love you Appa

    ReplyDelete
  6. மனதைத் தொட்ட கதை. தொடரட்டும் உங்கள் எழுத்து பணி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. காலரா வின் கபழிகரத்தை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள் அருமையான குமரி தமிழில். மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்து நடை🎉🎉🎉🎉

    ReplyDelete
  8. மிகவும் அருமையான வட்டார மொழியில் அந்த காலத்திற்கு அழைத்து சென்றுள்ளார். நாம் இப்போது அனுபவிக்கும் கொரோனா போல் அன்று காலரா மக்களை வாட்டி உள்ளது.புது புது நோய் கால இடைவெளியில் வந்த வண்ணமே உள்ளது. நமது ஆரோக்யத்தை நாம் பேணி காக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறார்.
    அந்த நாள் கிராமத்து வாழ்க்கைஐ மிகவும் அழகாக உணர்த்தியுள்ளார்.
    தொடரட்டும் உங்கள் எழுத்து. வாழ்த்துக்களுடன் நன்றி 👌🙏

    ReplyDelete

Post a Comment

Popular Posts