வௌலாடி (வௌவ்வால் ஆடி)

 வௌலாடி (வௌவ்வால் ஆடி)



மூத்தம்ம வீட்டு புறக்கடை முத்தத்துல புன்னக்காய் மலைபோல குமிஞ்சி கிடந்தது. புன்னக்கா உடைக்க சுற்றம் சூழ உள்ள பொம்பளய, தனித்தனியா நார்பெட்டில புனக்காய அள்ளி தட்டி வச்சிகிட்டு, ஆளுக்கொரு குழவிக்கல்லை கையில எடுத்து, கீழ ஒரு பாட்டுக்கல்லை போட்டு குழவி கல்லால ஒரு தல்லு தல்லுனதும் புன்னக்காய் உடஞ்சி வெள்ள வெளேர்-ண்ணி பரல் வெளியே வந்தது.

பரல பெட்டிக்கையும், தோட தனியாவும் கூட்டி வச்சிட்டு, தோட வீட்டுக்கு எடுத்து போவாவ. தோடு தான் கூலி. புன்னக்கா தோட வெயில்ல காயப்போட்டு பந்தஸ்து பண்ணி வச்சுகிட்டா, கார்த்தியலுக்கு எண்ண பண்டம் செய்யச்சிலயும் உருக்கெண்ண உருக்கச்சிலயும் அடுப்பு எரிக்க முறுக்கு மாதிரி பொரு பொருண்ணியிருக்கும்.

முழுப்பரல பெட்டி பெட்டியா கொண்டு வெளி முத்தத்துல செத்த நேரம் வாடப்போட்டு கூட்டுனான் சாமிக்கண்ணு.

சாமிக்கண்ணு ஏழு வயசுல இருந்தே மூத்தம்ம வீட்டுல ஒரு ஆளாதான் வளந்து வாறான். மேலக்காட்டுக்கு பாரத்துக்கு போன மாட்டுவண்டி பின்னால வண்டிய பிடிச்சிகிட்டு கால்போன போக்குல நடந்தே வந்துட்டான். வண்டிய நிறுத்திகிட்டு காளைய அவுத்து தொழுவுக்கு கொண்டு போனான் வண்டிக்காரன்.

மந்தையில தப்புன ஒத்தஆடு மாதிரி நின்னு முழிச்சிகிட்டிருந்தான். பழுப்பேறுன கால்சட்டைய பொத்தான் இல்லாம உடுத்திருந்தான். மேல் சட்டையுமில்ல. தலைமுடி சிக்குபுடிச்சி எண்ணமொட கண்டு ரண்டு மாசமிருக்கும். பல்லு தேய்க்காம மளுமளுண்ணி மஞ்சகுளிச்சி இருந்து.

மூத்தையா பலத்த குரலில் யாருல நீ…… பய நடுங்கி கிட்டே சாமிக்கண்ணு. மூத்தம்ம சத்தம் கேட்டு வெளிய வந்து பாத்துகிட்டு பாவம் யாருபெத்த புள்ளையோ - ண்ணி, கையபுடிச்சி கூட்டிட்டு போய், தொங்கிகிட்டிருந்த உமிக்கரி பெட்டியில இருந்து உமிக்கரிய கையில எடுத்து குடுத்து, பல்ல தேயிண்ணதும்…… பயலுக்கு உயிரு வந்து. ஒரு பெரிய வெங்கலகும்பா நிறைய பழையகஞ்சியும், ஒருகிண்ணியில பானகருப்பட்டியும் கொடுத்ததும், பய கிழக்கோமாயிருந்து கிருஷ்ணா-ண்ணி கஞ்சிக்குள்ள கிடந்த சோற அள்ளி தின்னுகிட்டே கஞ்சிய குடிச்சத மூத்தம்ம பாசமா பாத்துகிட்டே நின்னாவ! எந்த ஊருல புள்ளா? குலசேகரம்! உன் பேரு என்ன? சாமிக்கண்ணு! நீ வூட்டவிட்டு எப்பிடி வந்தா? ஏன் வந்தா?

எங்களுக்கு ஒரு குச்சிலு வீடும்மா. எங்க ஐயா மலை வேலைக்கு போவாரு. அந்திக்கு வரச்சில நல்லா குடிச்சிட்டுவந்து, நாங்க பதினொருபேரு. எங்கள தூக்கி போட்டு அடிப்பாரு. ஒரே பட்டினி. அதுக்குதான் நானா வந்துட்டன். கிழங்கு துண்டுக்கும் வழியில்லாம பத்து வயசு பிராயத்துல மேலக்காட்டுகாற பயவ தெக்கு வீட்டுல ராசேந்திரன், நடு வீட்டுல சந்திரன், கடைவீட்டுல டேவிட்-ண்ணி பஞ்சத்துல அடிபட்டு வீட்ட விட்டு வந்து வீட்டு வேலை செய்திட்டு கிடக்கானுவ. லே! வுள்ளே கஞ்சி குடுத்தாச்சின்னா அவன போச்சொல்லு-ண்ணி மூத்தையா சொன்னதும் பய ஓடி வந்து மூத்தம்ம கால ஆவிகட்டி பிடிச்சுகிட்டான். நான் எந்த வேலண்ணாலும் செய்வேண்ணி சொன்னதும், மூத்தம்மைக்கு மனம் எழவிட்டு. பய இங்கின கிடக்கட்டு. அவன தேடி யாரும் வந்தா கூட அனுப்பலாம்…...ண்ணி சொன்னாவ.

மூத்தம்மை கைநிறைய உருக்கெண்ணய அவனுக்க தலையில தேச்சி விட்டு, ஒரு சவுக்காரத்தையும் கையில கொடுத்து, புத்தங்கால்ல போய் கால் சட்டைய தொவச்சி காயப்போட்டுகிட்டு நல்லா முங்கி குழிச்சட்டுவா-ண்ணி பக்கத்து வீட்டு திரவியத்தையும் கூட அனுப்புனாவ. கூண்ட விட்டு பறந்து போற கிளியபோல பய புத்தங்காலுக்கு சிட்லு போல திரவியத்துக்க கூட பறந்து போனான்.

வீட்டு வேலை, வயலுவேலை, தோப்புவேலைக்கு நல்ல உதவியாயிருப்பான் சாமிக்கண்ணு. பள்ளிக்கொடத்துக்கு போச்சொல்லி நல்லா பாத்தாவ மூத்தம்ம. ஆனா சாமிக்கண்ணு முடியவே முடியாதுண்ணிட்டான். ஒரு பக்கம் புன்னக்கா உடைப்பு, இன்னொரு பக்கம் சாமிக்கண்ணு அள்ளிக் கொண்டு போட்ட முழுப்பரலை கத்தி, அருவா, இதுகள வச்சி பரல இரண்டாநறுக்கி போட்டுகிட்டிருந்தாவ, பொன்னம்ம பாட்டியும், அரிசி பிள்ளையும் மூத்தம்ம பரலு நறுக்குயத பாத்தா வேடிக்கையாயிருக்கும்.

மீனறுக்குய அருவாமணய கல்லுல ரெண்டு தீட்டு தீட்டி வச்சிகிட்டு, ரண்டு கையிலயும் முழுப்பரல அள்ளி, மீன் நறுக்குயது மாதிரி வலதுகையில் உள்ள பரல நறுக்குனதும், இடதுகை பரல் நறுங்கும். தொடர்ந்து வலது………. இடது…… செத்தநேரத்துல ஒரு நார்பெட்டி பரல நறுக்கிப் போடுவாவ.

நறுக்குன பரல பெட்டிபெட்டியாகொண்டு சாணியில மொழுவுன முத்தத்துல தட்டி கிண்டி காயப்போட்டான் சாமிக்கண்ணு. வெயிலு சுள்ளிண்ணி கொளுத்தி போட்டு.

தோளுல சாக்க தொங்கப்போட்டுகிட்டு யம்மா! வௌலாடி கிடக்கா…… யம்மா! வெளலாடி கிடக்காண்ணி சத்தம் போட்டான் ஆசாரிபள்ளத்து வாணியன். கொத்து கொத்தா பழுத்த பின்னக்காய வௌவால் பறிச்சி, ஏதாவது மர கொப்புல வச்சி தோல கடிச்சி சாறு குடிச்சிட்டு, புன்ன கொட்டையை கீழ போடும். ஒரு நாள் இருந்த இடத்திலதான், மறுநாளும் இருந்து, சாறகுடிச்சகிட்டு கீழே கொட்டையை போடும். இதுதான் வௌலாடி. தினசரி அந்த இடத்தில பாத்தா நாலஞ்சி பூட்டு வௌலாடி கிடைக்கும். காலையில சின்ன புள்ளையளுவ இத பறக்கி கூட்டிப்போட்டு வாணியங்கிட்ட வித்து காசு பாக்குயது வழக்கம்.

சாமிக்கண்ணு, வாணியன பாத்து, ஓய்…… நில்லும்! வெளிய மாமூட்டுல கூட்டிப் போட்டிருந்த வௌலாடியை, ஒரு நார் பெட்டியில் அள்ளி வந்து பூட்டு (பத்து காய்) என்ன விலை? பேரம் பேசி முடிச்சி வௌலாடியை எண்ணி குடுத்து, வாணியன் கொடுத்த ரண்டு ரூவாய, மூத்தம்மா! வௌலாடி வித்த பைசா. இத ஏங் கணக்குல வச்சிக்கிடுங்க-ண்ணி கொடுத்தான்.

லாடம்பான நெறய சுடுகஞ்சியும், சிரட்டை நிறைய துவையலும் கொண்டு மூத்தம்ம வச்சதும், தலைத் துண்ட வட்டமா சும்மாடா சுத்தி தலையில  வச்சி அதுக்கு மேல கஞ்சிப்பானையை தூக்கி வச்சி சாமிக்கண்ணு காலு ஒத்தபின்ன விளைய நோக்கி விறுவிறுண்ணி போச்சி. பின்னக்கா அடிச்சிட்டு இருந்த நாலுபேரும் இறங்கி வாறதுக்குள்ள, சாமிக்கண்ணு வடலிப்பனையில ஏறி ஓலையை வெட்டிப் போட்டான். வேலைக்கு வந்த செல்லமுத்து ஓலையை கிழிச்சி சாமிக்கண்ணுக்கும், மூத்தையாவுக்கும் சேத்து ஆறு பட்டை பிடிச்சார். குருசாமி கஞ்சியை கோரிகுடிக்க பனஇலக்க கரண்டி மாதிரி அறுத்து கொடுத்தாரு. குறு குறாயிருந்த உழுந்தங்கஞ்சிய ஊத்துனதும், கவசம் போல தேங்காதுருவல் மிதந்தது. பட்டயில கஞ்சியை உறிஞ்சிகுடிச்சிகிட்டு, பட்டை இலக்குக்கு இடையில இருந்த சிவப்பு தொவயலை இலக்குகரண்டியால எடுத்து வாயில போடச்சில கஞ்சி அமிர்தமா இருந்து.

காலமாடன்விளைக்கு நடுவுல பேச்சிபாறை தண்ணியை கொண்டு வர ஆத்துச்சானலும், இருபக்கமும் சானல் பராமரிக்க ஜீப்ட்ராக்-க்கும் எடுத்த இடம் போவ மேலபக்கம் கொஞ்சம் போல முக்கோணமா இடம் களிஞ்சி. அதுல ஒரு ஒத்த பின்னமரம். பின்னயா அது. ஆலமரமாதி மூணுபிரிவா பிரிஞ்சி, கூடாரம் போல இருக்கும். புன்ன பூ பூத்தா கொத்து கொத்தா வெள்ள வேளேர்-ண்ணி கண்ணை பறிக்கும். வாசனை மூக்க துளைக்கும். புன்னைக்கா காச்சா ஆகாயத்துக்கு பாம்படம் போட்டது மாதி காய்ய்க்க பெகளம்தான். எட்டு, பத்து ஆளுவ நின்னு நீளகளயவச்சி பின்னக்கா அடிச்சா, நிலம் தெரியாம பச்சபந்த விரிச்சி போட்டது மாதியிருக்கும். ஆத்துல தண்ணி போனா அதுலவிழுய காயைபொறுக்க மூணு பேராவது, சோத்துப் பெட்டிய வச்சி பொறக்கி மறுகடத்துனாதான் ஆத்தோட போறத செறுக்க முடியும்.

புன்னகாய்க்க கனம்தாங்காம காத்துல ஒவ்வொரு கொப்பா முறிஞ்சி இப்போ ஒரே கொப்புல நிக்குவு. ஆனாலும் காய்வலத்துக்கு குறைவில்ல. இதுக்கு இடையில காக்கா எங்கேயோ கிடந்த மாம்பழத்தை கொத்திட்டு வந்து தின்னுட்டு இருக்கச்சில கொட்டை தவறி பின்னபேட்டுக்குள் விழுந்து, மாங்கண்ணாகி நெடுநெடா அரசன் வீட்டு இளவசரன்போல வளந்து குமிறிச்சு. பின்னக்கா பறிச்ச தங்கபெருமா, ! சாமிக்கண்ணு மாங்கண்ண வெட்டித் தள்ளிருவமா-ண்ணதும், அது ஒம்மள என்ன ஓய் செய்வு, விட்ரும்-ண்ணான் சாமிக்கண்ணு.

முத்தத்தில் விரிச்சிப்போட்ட பரலு. வெயிலுல வாடி சுருண்டு, வெள்ள நிறம் போய் கூப்பனி நிறமாயிட்டு. எல்லாத்தையும் அள்ளி வீட்டுல ஒரு மூலையில மலைமாதி குமிச்சி போட்டிருந்து. நாலு, அஞ்சு கோட்டபரலுன்னா சும்மாயா இருக்கு. பரல்காறனுவ வாறதும், பரல கைல அள்ளி அமுக்கி பாக்குயதுமாயிருக்கும். ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு விலய சொன்னா, கத நடக்குமா. சரியான வில வந்தாதான் மூத்தம்ம வீட்டுல பரல் அளக்க முடியும்.

கரண்ட் இல்லாத அந்தகாலத்துல எல்லாவீட்டுலயும் பின்னக்கெண்ணையிலதான் விளக்கு எரிக்கியது பழக்கம். ஒத்த காள வண்டியில பெரிய பெரியகடவத்துல எண்ணைய பானையள வச்சி கொண்டுவந்து யாவாரம் செய்வானுவ. எண்ணக்காரனுக்க பெரியகடவத்துல பெரிய பானநிறய எண்ணயும், கழிவு எண்ண வாங்க சின்ன பானையும், மூங்கில் நாழியும், தொடமும் இருந்து. சாமிக்கண்ணு சாமி வீட்லயிருந்து எண்ணபானையும், மூடிபானையும் எடுத்துட்டு வந்து, கழிவு எண்ணய கொடுத்துகிட்டு பெரியபான நிறைய எண்ணய வாங்கிட்டு தூக்க முடியாம முக்கி மொனங்கி தூக்கிட்டு போனான். கொடுத்த எண்ணைக்கு விலையா மரக்கால வச்சி பரல அளந்து எடுத்தார் எண்ண யாவாரி.

பேச்சிப்பாற அணையில வெள்ளமும்இல்லாம, மழை வெள்ளமும் இல்லாம கடும்வெறி ஒண்ணு வந்து. அதுல பால்மரங்கள் பட்டு சரிஞ்சி போச்சி. அதிலும் மொத மொத பட்டது பின்னமரம்தான். என்ன்னா பின்னமரம், என்ன்னா! பின்னக்கா, என்ன்னா வௌலாடி பறக்குன இடத்துல! பின்னவம்சமே அழிஞ்சு போச்சே. அதுக்கு இடையில ஒத்தபின்னையா தப்பும் அதுவும் பட்டு மாண்டு போச்சி.

புதுவல் காட்டு வெளியிலயிருந்து ஈரம்பாஞ்ச காத்து சிலுசிலுண்ணி வீசி புன்னமரத்துல படும்போது அந்த இடமே குளுகுளுண்ணியிருக்கும். வயலுக்கு போட நாஞ்சி நாட்டு குளத்துலயிருந்து சக்கடவண்டியில கொண்டுவந்த கருமண்ண, கூட்டம்கூட்டமா மேலிருந்து கீழா சாய்வா இறக்கியிருப்பாவ. விளையாட்டுபுள்ளய கருமண்ண, தண்ணிவிட்டு கொளச்சி ரேடியோசெட், குழாய், ஆம்பிளிபெயர் தட்டுவண்டி, அம்மி, குழவி, பிள்ளையாருண்ணி ஆளாளுக்கு தோணுயதை செஞ்சி விளயாடுவானுவ. வெயில்ல அலஞ்சி, தலசுமடுல யாவாரம் பாக்குய யாவாரிய, வழிப்போக்கனுவ, நிழலை கண்டதும், செத்தஇருந்து எழும்புலாண்ணி கருமண்ணுல இருந்தா! தலைதுண்ட விரிக்கச் சொல்லும், வீசுயகாத்துல கண்ணு சொக்கிப்போவும். அப்படிப்பட்ட பின்னமரம் பட்டத பாத்து ஏங்குன சனம் ஒருபாடு.

ஒண்ணு போனா இன்னொண்ணு வருவது இயற்கை தான. பின்னபேட்டில் வளர்ந்த மாமரம். சடார்ண்ணி ஆலாவிருச்சமா வளர்ந்து, அதே மாதிரி நிழலும் காத்தும் தொடரத்தான் செய்வுவிலையில்லாத நேரத்துல, மூடை மூடையா மாங்கா காய்ச்சி தொங்கும். அளவில்லாத மாங்கா! வாயில வச்சா, அட்டபுளிப்பு. யாவாரிய பறிச்சிக்கண்ணா பறிகூலி கட்டாதுண்ணுவான். ஏல சும்மா பறிச்சிக்கண்ணாலும் திரும்பியே பாக்கமாட்டான். மொத்த மாங்காயும் பழம் பழமா பழுக்க பறவைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். கூச்சலும், கத்தலும் ஒரு விதத்துல அதுவும் தர்மம் தான. மாமூடுல பொழுது போக்குற வாலிப பசங்க மாமூடு பாய்ஸ்-ண்ணி வாட்ஸ்அப் குழு ஒண்ணு தொடங்கியிருக்கானுவ. புன்னமரம், புன்னக்கா, புன்னக்கா தோடு, வௌலாடி, களக்கம்பு, பட்ட ஓலை, உளுந்தங்கஞ்சி, பின்னக்கா உடைப்பு, பரலு, பின்னக்கெண்ண, எண்ணபான, மூடு பான, குழிவான மரஎண்ணஆப்ப, செம்மண்சுவடின் கடந்தகால தடங்கள், மண்சார்ந்த மக்களின் உழைப்பு, யாருக்கு இனி தெரியும், புரியும்…… ஒத்த பின்ன விளை, மாமரகாத்துலயும்….. மாம்பழஎச்சத்துலயும் சொக்கி நின்னாலும் பேரு என்னவோ ஒத்தபின்னவிளயாத்தான் தொடருவு…..

வைத்தியர்மகன் - வேஆறுமுகவேலப்பன்

 

Comments

  1. மலரும் நினைவுகள் இளைய தலைமுறைக்கு கதையாக... பழஞ்சுவடுகள் பத்திரமாக பதிக்கப்பட்ட புத்தகமாக உருவெடுத்தது என்றும் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அருமையான பதிவு. வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் எழுத்துப் பணி

    ReplyDelete

Post a Comment